Wednesday, December 20, 2017

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமாரும் கே.சி.பழனிச்சாமியும் எழுப்பிய சந்தேகங்கள் அனைத்துக்கும் டி.டி.வி. அணியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஆவேசமாக பதிலளித்தார்.

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி

இசட் ப்ளஸ் பாதுகாப்பு மருத்துவமனைக்கு வெளியேதான். மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவாக இருப்பதாக போலீசாரை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் தனிச் செயலாளர்கள்தான் இருந்தார்கள். இன்று இவ்வளவு பேசும் அமைச்சர் ஜெயக்குமார் அன்றைக்கு ஏன் வந்து மருத்துவமனையில் பேசவில்லை. மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார், எடப்பாடி பழனிசாமி இருந்தார். அவர்கள்தான் ராகுல்காந்தி, வெங்கையா நாயுடு, ஆளுநர் போன்றவர்களை வரவேற்றார்கள். ஜெயலலிதா மரணம் அடைந்த உடனே சொல்ல வேண்யதுதானே, ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை என்று.

ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருக்கும்போது, ஜெயலலிதா மரணத்தில் மரணம் இருக்கிறது என ஸ்டாலின் கேட்கிறார். ஸ்டாலின் சந்தேகம் என்று கேட்கும்போது, ஜெயக்குமாரும் ஆமாம் சந்தேகம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே. ஸ்டாலின்  பேச்சுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும்  சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட்டது  என்றும் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறாரா இல்லையா. அப்போது எழுந்து நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று ஜெயக்குமார் ஏன் சொல்லவில்லை.

நாங்க அம்மாவை பார்த்தோம், எலெக்சனுக்கு போறோமுன்னு சொன்னப்ப ஆசிர்வாதம் பண்ணினாங்க என்று திண்டுக்கல் சீனிவாசன் மதுரை மேடையில் பேசியதோடு மட்டுமல்லாமல், பெற்ற பிள்ளைகள் மீது சத்தியம் செய்தார். அன்றைக்கு ஜெயக்குமார் அவரிடம், நாங்கள் யாரும் பார்க்கவில்லை ஏன் பெத்த பிள்ளைகள் மேலே சத்தியம் செய்து பேசுகிறீர்கள் என்று ஏன் கேட்கவில்லை. அதற்குள்ள என்ன சொன்னார்களோ தெரியவில்லை, அடுத்த கூட்டத்தில் நான் பொய் சொல்லிவிட்டேன் என திண்டுக்கல் சீனிவாசன் பேசுகிறார். பெத்த பிள்ளைகள் மேலே சத்தியம் செய்ததே பொய் என்கிறார். இவர்கள் முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில்தான் நீதி விசாரணை வைத்துள்ளார்கள். நாங்கள் சிபிஐ விசாரணையே வேண்டுமென்று கேட்டுள்ளோம்.

விசாரணை கமிசன் அமைத்துள்ளபோது அங்கு வீடியோவை கொடுக்க வேண்டியதுதானே என கேட்கிறார்கள். முதலில் மக்களிடம் கொடுக்கிறோம். மக்கள் மன்றத்தில் தெளிவுப்படுத்துகிறோம். விசாரணை கமிஷன் கேட்கும்போது அங்கும் சமர்ப்பிப்போம். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் வீடியோ வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளில் அத்தனை பேரும் ஜெயலலிதாவுடைய மரணம் குறித்து பேசுவது ஏன். மக்களுக்கு ஆளும் கட்சி எந்த நலத்திட்டத்தையும் செய்யவில்லை. செய்திருந்தால் அதைப்பற்றி பேசியிருப்பார்கள். எங்கள் தரப்பில் மரணம் பற்றிய பேச்சை தடுத்தோம். அவர்கள் தரப்பில் அம்மாவை கொலை செஞ்சுட்டாங்ன்னு பேசியவர்களை, ஏன் தடுக்கவில்லை. அப்படியானால் அவர்களை அனுமதிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

வீடியோவை வெளியிட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்றால், கடந்த இடைத்தேர்தலிலேயே வெளியிட்டிருப்போம். சசிகலாவிடம் பலமுறை நாங்கள் கேட்டோம். வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.  டெல்லிக்கு செல்லும் கே.சி. பழனிசாமி எய்ம்ஸ் மருத்துவமனையிடம் ஜெயலலிதா பற்றிய மருத்துவ சிகிச்சைகளை கேட்டுக்கொள்ளட்டும். வெங்கையா நாயுடு மத்திய அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்துவிட்டு, ஊடகங்களை சந்தித்து சிகிச்சைகள் நன்றாக நடக்கிறது என்றார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும், மறைந்துவிட்டபோதும் அவரது புகழை கெடுப்பது சசிகலா குடும்பத்தினர்தான் என்று ஜெயக்குமார் கூறுகிறாரே. அப்புறம் ஏன் அந்த குடும்பத்தினர் காலில் விழுந்தார்கள். அன்று ஏன் டிடிவிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டீர்கள். அன்றைக்கு இந்த குடும்பத்தைப் பற்றி தெரியாதா. ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த கட்சி வேண்டாம், அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே போயிருக்கலாமே. போயஸ் கார்டனை சுற்றி சுற்றி வந்து சசிகலாவை ஏன் பொதுச்செயலாளராக்கினார்கள். சசிகலா இந்த அரசை அமைத்து கொடுத்த பின்னர்தான் தெரியுமா. அம்மாவே போயிட்டாங்க எங்களுக்கு எதுக்கு பதவி, அதுவும் ராத்திரியில் பதவியேற்பதா என கூறிவிட்டு இந்த அரசை கலைத்துவிட்டு புதியதாக தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே. ஓ.பன்னீர்செல்வம் வெளியே சென்றபோது ஜெயக்குமார் ஏன் கூவத்தூரில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தோடு சென்றிருக்க வேண்டியதுதானே. உங்களது தலைமையை ஏற்கிறோம் என்று சசிகலா காலில் ஏன் விழுந்தார் என்று காட்டமாக கேட்டார் சரஸ்வதி.

0 comments :

Post a Comment

 
Toggle Footer