Tuesday, December 19, 2017

சமீபத்தில் வெளியான 'அருவி' திரைப்படம் பார்த்த அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றும், அதிர்வலைகளை ஏற்படுத்தியும் வருகிறது. அந்த திரைப்படத்தில், முக்கிய பகுதியாக 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி காட்டப்படுகிறது. ஏற்கனவே, 'என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா?' என்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் சொற்கள் பாடல், திரைப்பட  நகைச்சுவை காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என அனைத்து வடிவங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது, மீண்டும் 'அருவி' படம் ஏற்படுத்தியுள்ள கேள்விகளை 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் வைத்தோம். எதையும் தவிர்க்காமல் பதிலளித்தார்...                             
படங்களில் காட்டப்படுவது போல உங்கள் நிகழ்ச்சி  இயக்குனரின் இயக்கத்தால், அங்கு வருபவர்கள் அழுவது, அடிப்பது எல்லாம் நடக்குமா?

எங்கள் நிகழ்ச்சியில்  அடித்துக்கொள்வது, அழுவது போன்ற சம்பவங்கள்  நடந்திருக்கிறது.  அதெல்லாம் அவர்கள் உண்மையாக தங்களின் எமோஷனில் கையை மீறி நடப்பதாகும். இதை தவிற  ஸ்கிரிப்ட் வைத்து நாங்கள்  டிஆர்பியை ஏற்ற எதுவுமே  செய்வதில்லை. இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சாரிட்டி அல்ல. சில எதிர்பார்ப்புகள் இருந்தால் தான் இந்த நிகழ்ச்சி ஓடும். ஆனால் அதற்காக  முன்பே பேசி வைத்து எடுப்பதில்லை. இதுவரை நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் யாரையும் அழ விட மாட்டேன் அவர்களை அழவைத்துவிட்டு என்னால் அவர்கள் முன் உட்கார முடியாது. மனசாட்சிக்கு விரோதமாக இதுவரை  ஒரு எபிஸோடிலும்  செய்ததில்லை. 1200 எபிசோடுகள் முடித்துள்ளேன், அதில் 1150 எபிசோடு வரை என் நிகழ்ச்சிக்கு வரும் யாரையும் முன்னரே  சந்தித்தது இல்லை. நான் ஒரு பிரபலம் என்று நினைத்திருந்தால் இந்த நிகழ்ச்சி தற்போது வரை செய்திருக்க முடியாது. நான் ஒரு பெண் என்று நினைத்ததாலேயே  முடிந்தது. அங்கு நான் ஒரு நடிகராகவே இல்லை, அவர்கள் பிரச்சனை  முன்கூட்டியே தெரிந்தால் அது 'ஸ்க்ரிப்டட்'  ஆகிவிடம் என்பதால்  அந்த இடத்தில் தான் பிரச்சனைக்கு தீர்வு காண நிகழ்ச்சியை நடத்துகிறோம். அங்கு எடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 100 சதவிகிதம்  உண்மையாகத்தான் எடுக்கப்படுகின்றன.

உங்க நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்கள் தான் வருகிறார்கள். அவர்களை கொண்டு வந்து, அவுங்களோட பிரச்சனையை பயன்படுத்திக்கொள்கிறீர்களா?

முதல்ல நீங்க 'கொண்டு வந்து' என்ற வார்த்தையை மாற்றுங்கள். நாங்க கொண்டு வருவதில்லை, அவர்கள் தான் தேடி வருகிறார்கள். நீங்க கேள்வி கேட்ட விதமே தவறு. அதை மாற்றுங்கள்.   

சரி,  ஏழை, எளிய மக்களுக்கு மட்டும்தான் உங்கள் அரங்கு அதிகமா பயன்படுகிறது என்று  யோசிச்சிருக்கீங்களா ? அவுங்களுக்கு  மட்டும்தான் பிரச்சனை இருக்கா?

ஏழை, எளிய மக்கள்தான் அவர்களது இமேஜை பற்றி கவலை படுவதில்லை. 'எங்கள் பிரச்சனையை பார்த்து  இனிமேல் யாரும் இதுபோன்ற பிரச்சனையில் சிக்காமல் இருந்தால் போதும்' என்று  யோசிக்கின்றனர். என்னை போன்றவர்கள்தான் இமேஜை பற்றி நினைத்து வர பயப்படுகின்றனர். ஏழை எளிய மக்கள்தான் தெளிவாக இருக்கின்றனர், பணக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்கள்  பாரத்தை இறக்க யோசிக்கின்றனர்.  இதில் பணக்காரர்கள் வந்தால் டிஆர்பி குறைந்துவிடும் என்றெல்லாம்  நாங்கள் ஒதுக்குவதில்லை. இப்பொழுது வரும் மக்களின் பிரச்சனையையும் கூட  ஒரு மணி நேரத்தில் முழுதாக  முடிக்க முடியாது. ஆனால், இங்கு  வந்த பின்னர் அவர்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள் என்று இதுவரை நடந்த  நிகழ்ச்சிகளையும் பின்னர் அவர்கள் வாழ்க்கையையும்  வைத்து சொல்கிறோம்.

பொதுவாக உங்கள் நிகழ்ச்சியில், 'நம்ம  கலாச்சாரத்தில் இடமில்ல, சமுதாயத்தில் இடமில்ல' என்று சில விஷயங்களை குறிப்பிடுகிறீர்கள். எதை வைத்து கலாச்சாரத்தை நிர்ணயம் செய்றீங்க?

கலாச்சரம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான். இயற்கை ரீதியாகவே விலங்குகளுக்கு வரைமுறை கிடையாது.  மனிதனுக்கு சமுதாயத்தை வளர்க்க இதுபோன்ற வரையறை தேவைப்பட்டது. இதற்கு அடிப்படை காரணம், பெற்றோர்கள் தவறு செய்தால் அதை பார்க்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.  மனிதன் உருவாக்கிய வரைமுறையைத்தான் கலாச்சாரம் என்று சொல்கிறேன். அதே போன்று கலாச்சாரம் வேறு, மூடநம்பிக்கை வேறு. கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிச்சது, பொட்டு  வைக்கக் கூடாது என்பது, இதெல்லாம் கலாச்சாரம் அல்ல மூடநம்பிக்கையே. திருமணத்திற்கு வரதட்சணை வாங்கவேண்டும் என்பது, சதி இதெல்லாம் தான் மூடநம்பிக்கை. இது நம் கலாச்சாரம் அல்ல. சம்பிரதாயம் வேற கலாச்சாரம் வேற. சம்பிரதாயத்தில் நல்லதும் உண்டு கேட்டதும் உண்டு. அதை சரியாக நம் காலத்திற்கு ஏற்ப மாற்றி  ஏற்றுக்   கொள்ளவேண்டும். கலாச்சாரம் மாறாது, மாறினால் மனிதர்கள் ஆகிய நாம் அழிந்துவிடுவோம். மக்கள் ஏன் ஜல்லிக்கட்டிற்காக போராடினர்? அது நம் கலாச்சாரம், தமிழரின் பெருமை. அது ஒரு சம்பிரதாயமாக இருந்திருந்தால் அதை மக்கள் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

ஒரு குடும்பத்தின் பிரச்சனை உச்சக்கட்டத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே,  "டைரக்டர் சார்... எனக்கு நேரமாச்சு, சீக்கிரம் ஷோவை முடிக்க பாருங்க" என்று சொல்வது போல படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. இப்படித்தான் உங்கள் நிகழ்ச்சியில்  நடக்குமா?

இல்லவே இல்லை, அங்க என்ன நடக்கும்னா, '6 மணிநேரம் ஆகுது...  என்டிங் போகலாம்' என்று இயக்குனர்  தான் சொல்லுவாங்க. அப்பவும்  நான் நேரத்தை  மறந்துடுவேன். அங்க டேக் எடுக்க ஆரம்பிச்சிட்டா அது முடியற வரைக்கும் கட் வராது. எப்போதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமா வேணா நடக்க வாய்ப்பு இருக்கு, மற்றபடி நடந்ததே  இல்லை.

சந்திப்பு : ஃபெலிக்ஸ்
தொகுப்பு : சந்தோஷ் குமார்

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer