Wednesday, December 27, 2017

கொளத்தூர் நகைக்கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பெரியபாண்டியனுடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தனிப்படை போலீசாருடன், கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது துப்பாக்கியை பிடுங்கியே கொள்ளையர்கள் சுட்டதாக முதலில் கூறப்பட்டது. இதன் பின்னர் அவர் பலியானது பற்றி வேறுவிதமாக தகவல் பரவியது.

அவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிராஜ், கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது முனிராஜின் துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அந்த துப்பாக்கியை எடுத்தே கொள்ளையர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ஜெய்தரன் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியபாண்டியனுடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர், முனிசேகர் அளித்த வாக்குமூலத்தில், கொள்ளையர்கள் தாக்கியபோது தனது துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அதை பெரியபாண்டி எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். எனவே, முனிசேகரின் துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்ததாக முன்னர் கூறப்பட்டது.

குண்டு காயங்களுக்காக ராஜஸ்தானில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய முனிசேகரிடம் தமிழக காவல் உயரதிகாரிகள் இதுதொடர்பாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரியபாண்டியனை காப்பாற்ற முயன்றபோது முனிசேகரின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததில் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாக தமிழக காவல்துறை நேற்றுத் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் போலீசார் நடத்திவரும் விசாரணைக்கு பின்னர், ஆய்வாளர் முனிசேகர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு..

பெரியபாண்டியனைச் சுட்டது முனிசேகரனா!? - சென்னை போலீஸ் மறுப்பு..

`ஆய்வாளர் முனிசேகர்தான் பெரியபாண்டியனைச் சுட்டார்’ என சென்னை காவல்துறை கூறியதாக தகவல் பரவியது. தற்போது, இதை மறுத்துள்ளது காவல் துறை. 

சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 8-ம் தேதி மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் குருமூர்த்தி, எம்புரோஸ், சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளையன் நாதுராம் தன்னுடைய கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாகத் தகவல் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் போலீஸார் சென்றனர். அப்போது, நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் காயமடைந்தனர்.

பெரியபாண்டியனை ராஜஸ்தான் கொள்ளையர்கள் சுட்டுவிட்டதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்த்ரன் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெரியபாண்டியனின் உடலைத் துளைத்த குண்டு, முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். மேலும் 'சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக கூறினார்.

இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியத் தகவல் உண்மைதான் என சென்னை போலீஸ் கூறியதாக தகவல் பரவியது. மேலும்,  ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில், ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களைச் சுட்டபோது தவறுதலாகப் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என வரும் தகவலை சென்னை பெருநகர காவல் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே விசாரணையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை வட்டாரம் தகவல் கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer