Saturday, December 23, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியல்வாதியாக தோற்றுவிட்டார் என்று விமர்சிப்பவர்கள், அவரின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு கூறி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்தபோதும், அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதியாகத் தோல்வியடைந்துவிட்டார் எனவும், மத்தியஅரசு வழங்கும் நிதியையே சரியாகப் பயன்படுத்தத் தெரியாத முதலமைச்சர் மலேசியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லையெனவும் கேலியும் கிண்டலும் தொனிக்கச் சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரோ பேசியிருக்கின்றார்.

அவர் மட்டுமல்ல சிங்களத் தரப்பு அரசியல்வாதிகள் பலரும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையையும் விமர்சிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. முதலமைச்சர் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே, மக்கள் மனங்களில் இருந்து அவரைக் கீழிறக்கும் உள்நோக்கில் இவ்வாறு தவறாக விமர்சித்து வருகின்றனர்.

விக்னேஸ்வரன் அவர்கள் நீண்டகாலமாகத் தென்னிலங்கையில் வாழ்ந்தவர் என்பதாலும், சிங்கள த்தரப்புடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தமையாலும் அவரைத் தமது விருப்புகளுக்கு ஏற்ப கையாளலாம் என்பதே சிங்களத்தலைமைகளினதும் அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கியவர்களினதும் எண்ணவோட்டமாக இருந்தது. ஆனால்,இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்தன. தமிழ் மக்களின் அரசியல் வேணவாவையும் போரில் அவர்கள்பட்ட ஆற்றொணாத் துயரங்களையும் நேரில் கண்டுணர்ந்த முதலமைச்சர், அவற்றுக்கான நிரந்தரத்தீர்வு வேண்டி உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் எழுப்ப ஆரம்பித்தார்.” என்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer