Tuesday, December 5, 2017

முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கென ஒரு வட்டத்தை போட்டு அதனுள் இருந்தார். பல்வேறு ரகசியங்கள், வதந்திகள் இருந்தன. அதனால் எப்பொழுதும் அவர் ஊடகங்களிடமிருந்தும் தள்ளியே இருந்தாலும்  எப்பொழுதும் செய்தியாகிக் கொண்டு தான் இருந்தார். கலைஞரை போல ஊடகங்களுக்கு அணுக்கமாவராய் எப்பொழுதுமே ஜெயலலிதா இருந்ததில்லை.. அவரது  1991-96 ஆட்சியின் பொழுதெல்லாம் முற்றிலும் தமிழ் ஊடகங்களை புறக்கணித்தே வந்திருக்கிறார்.  ஆனாலும் எப்போதாவது ஒரு முறை அவர் அளித்த பேட்டிகள் பரபரப்பேற்படுத்த தவறியதில்லை. அவை பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களாகும்.

மைக்கை எறிந்தார்...

ஜெயலலிதாவின் மிக புகழ் பெற்ற நேர்காணல் என்றே இதை கூறலாம். 2004இல் பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட   'ஹார்ட்டாக் இந்தியா' (Hard Talk)  என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் தாப்பர் ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவை  தன் கேள்விகளால் சீண்டினார். சற்று ரணகளமாகவே சென்ற பேட்டியில் ஒரு கட்டத்தில் தி .மு .க வை பற்றி  குற்றம் சாட்டும் போது  ஜெயலலிதா  கையில்  பேப்பர் இருந்தது. அதற்கு கரண் தாப்பர், 'நீங்கள் ஏன்  குறிப்புகளை  பார்த்து  சொல்கிறீர்கள்?' என்று கேட்க,  கோபமடைந்த  ஜெயலலிதா 'நான் ஒன்றும் பார்த்து படித்து சொல்லவில்லை, உங்கள் முகத்தை பார்த்து தான் சொல்கிறேன்' என்பார். இப்படி அனலாகவே சென்று கொண்டிருந்த நேர்காணலில் ஜெ.வின் ஜோசிய நம்பிக்கை பற்றிய கேள்வியில் பற்றி எரிய  ஆரம்பித்தது. விருப்பமற்ற முறையில் வந்து முகத்தின் முன் நின்ற கேள்விகளால் கோபமடைந்த ஜெயலலிதா, நேரடியாக கோபத்தை காட்டினார்.  அந்த  நேர்காணலின் இறுதியில் 'வரும்  2006 ஆம் ஆண்டு தேர்தலில்  வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, 'எனக்கு ஜோசியம் பார்த்து கணிக்க தெரியாது, நீங்கள் இங்கு தானே இருப்பீர்கள்,  பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறிய ஜெயலலிதா, இறுதியில் 'உங்களிடம் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கரண் தாப்பர் கூற,  'உங்களிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை' என்று கூறி  மைக்கை எறிந்து  விட்டு கோபமாக சென்றுவிட்டார்.

'என் முடிவுகளை நான் எடுக்கவில்லை'

என்.டி.டிவியில் 'டாக்கிங் ஹெட்ஸ்' எனும் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பதில்கள்  பொறுமையாக இருந்தது. அதன் தொகுப்பாளர் ஜெனிபர்  அருள் கேள்விகளை ஜெயலலிதாவுக்கு ஏற்ப கேட்டார்.  'உங்கள் தனிப்பட்ட வாழ்வும், பொது வாழ்வும் ஒரு போர்க்களமாகத்தானே உள்ளது, அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அதற்கான சக்தி  உங்கள் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்து பெறுகிறீர்களா?' என்ற கேள்விக்கு,  'எனக்குள் தான் எனக்கான சக்தியை பெறுகிறேன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டதில்லை.  இதுவரை எனக்கான துறையை தேர்ந்த்தேடுத்தது கூட நானில்லை. சினிமாவிற்கு என் அம்மாவினால் தான் வந்தேன். அரசியலுக்கு  எம்.ஜி.இராமச்சந்திரன் தான் அழைத்து வந்தார்.  அதனால் அனைத்து பிரச்சனைகளையும் நான் காலப்போக்கில் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். இப்படி தன் தனிப்பட்ட வாழ்வை பகிர்ர்ந்திருந்தார் ஜெயலலிதா.

'என் க்ரஷ் சமி கபூர்!'

1999ஆம் ஆண்டு  சிமி கார்வெல்  நடத்திய 'ரெண்டேஸ்வஸ்'  என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்  ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இன்னொரு முகத்தை காட்டுவதாக அமைந்தது  இந்த பேட்டி. மிகவும் உற்சாகமான பேட்டியான  இதில் சிமி கார்வல்  ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசும்பொழுது, 'அப்பொழுது  உங்கள் மனதைக் கவர்ந்த ஆண்கள் யாரும் இருந்தனரா' என்று கேட்க, கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் மீது 'க்ரஷ்' இருந்ததாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே அப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை காணச் சென்றதாகவும் கூறினார். மேலும் ஹிந்தி திரைப்பட நடிகர் சமி கபூரையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார்.  தொகுப்பாளர் சிமி, ஜெயலலிதாவிற்கு பிடித்த பாடல் பற்றி கேட்டு, அதை பாடச் சொன்னார். முதலில், 'இப்பொழுது பழக்கத்தில் இல்லை என்று கூறி பாட மறுத்த ஜெயலலிதாவை, சிரித்துக் கேட்டு, பாடவைத்துவிட்டார் சிமி. 'ஆஜா சனம்' என்ற அந்த ஹிந்தி பாடலை  அழகாக பாடுவார் ஜெயலலிதா. இந்த பேட்டி ஜெயலலிதாவின்  குதூகலத்துடனும் சிரிப்புடனும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இருக்கும்.

இவைதான் ஜெயலலிதாவின் புகழ் பெற்ற நேர்காணல்கள். ஜெயலலிதா  குறைவாகத்  தான் பேட்டிகள்  கொடுத்துள்ளார்.  அதுவும் தமிழ் ஊடகங்களுக்கு மிக மிக அரிது. 2011இல்  முதல்வராக பதவியேற்ற பொழுது, செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 'இனிமேல் உங்களை வாரா வாரம் சந்திப்பேன்' என்று கூறினார். அவரது அணுகுமுறை மாறிவிட்டதோ என்று செய்தியாளர்கள் நினைக்க, அடுத்த வாரமே அது தவறென தெரிந்தது. செய்தியாளர் சந்திப்புகள் நடக்கவில்லை. ஊடகங்களிடமிருந்து விலகி விலகி சென்ற ஜெயலலிதாவிடம்  கடைசி வரை  கேட்கப்படாமலேயே நூற்றுக்கணக்கான கேள்விகள் செய்தியாளர்கள், மக்களின் மனதில் இருக்கின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer