Friday, December 8, 2017

‘ஆசனப் பங்கீட்டுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்காக சகலரும் விட்டு கொடுப்புக்களை நிச்சயமாக செய்யவேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும், பிணக்குகள் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அல்லது நாளை சனிக்கிழமை தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆசனப் பங்கீடு சம்பந்தமாக ஒரே கொள்கையில் அனைவரும் பயணிக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து பிளவு என்ற சிந்தனையே அவ்வாறான முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

விட்டுக்கொடுங்கள் அப்படி விட்டுக்கொடுத்தால் ஆசனப்பகிர்வார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு வராது. இது தொடர்பில் யாழில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன. மீண்டும் ஓர் முயற்சியில் நாம் இணைத்துள்ளோம். நாளை (இன்று) அல்லது நாளை மறுதினம் (நாளை) இதற்கான தீர்ப்பு அல்லது முடிவு எடுக்கப்படும்.

கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிரிந்துதான் செல்ல வேண்டும் என தீர்மானம் எடுப்பார்களேயானால் அதன் பின்னர் தமிழரசுக் கட்சி தனித்தே போட்டியிடும். ஆனால் அவ்வாறான நிலை வராது. மக்கள் அமைதியாக இருக்கவேண்டும். தற்போது ஆசன பங்கீடு தொடர்பாக கூட்டமைப்பிற்குள் எழுந்திருக்கும் குழப்ப நிலைக்காக தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கோருவதற்கும் தயாராக உள்ளேன்.

உதயசூரியன் சின்னம் தமிழர்களுடைய அரசியல் வாழ்விலே மறக்கமுடியாத ஓர் சின்னம். ஏனென்றால், 1977 ஆம்ஆண்டு தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றது உதயசூரியன் சின்னம். ஆனால், தமிழ் மக்கள் சின்னத்தை வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை. மக்கள் கொள்கைக்காகவும், அந்த கொள்கையை வைத்திருப்பவர்கள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காகவும் பகுத்தறிந்தே வாக்களிப்பார்கள்.

எனவே, இந்த சின்னத்துடன் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஆனந்த சங்கரியும் மக்களிடம் செல்வது அந்த சின்னத்தை இழிவுபடுத்துவதாக இருக்கும். அதேபோல் சுரேஸ் பிரேமச்சந்திரன்தான் ஒரு பலமான சின்னத்தை பெற்றிருக்கின்றேன் எனவும் நினைத்துவிட கூடாது. மேலும், 2003ஆம் ஆண்டு ஆனந்த சங்கரி அந்த கட்சியை முடக்கி 2004ஆம் ஆண்டு அந்த சின்னத்தை பயன்படுத்தாதவாறு நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்றிருந்தார்.

அதன் காரணத்தினால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் செயற்பட வேண்டியிருந்த நேரத்தில், 2004ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது ஆனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை கைப்பற்றியிருந்தாலும் வாக்குக்கள் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் இல்லை கொள்கையை பார்த்து வாக்களிப்பவர்கள்.

அதேபோல் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழரசு கட்சி கைவிட்டுவிட்டது எனவும் கூற முடியாது. இலங்கையின் முன்னாள், இந்நாள் அரசாங்கங்கள் மீது சர்வதேச அழுத்தம் வருவதற்கு நாங்களே காரணம். அதனாலேயே 2 தடவைகள் அரசாங்கம் தானும் ஏற்றுக்கொண்டு ஐ.நா.சபையின் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.

அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்காக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் பணிகளும் நடைபெற்ற வருகின்றது. அது நிறைவு பெறாத நிலையில் அது வெற்றியடையும், தோல்வியடையும். எனவே அதில் பங்கு கொள்ள கூடாது என்பது மடமைதனம். நாங்கள் கேட்டதை அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதனை எதிர்ப்பது சரியல்ல. அதேபோல் அரசாங்கம் செய்வதுபோல் செய்து பின்னர் ஏமாற்றும் என மக்கள் நினைப்பதும் நியாயமானது. ஆனால் கேட்டதை செய்யும் போது ஆதரவளிப்பதும், செய்யாது போனால் எதிர்ப்பதும் எங்களுடைய கடமை.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer