Monday, December 4, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அணியாக களமிறங்கும் என்று கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணி பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளதாவது, “கலந்துரையாடலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் ஆராயப்பட்டன. இதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம்.

இதேவேளை, ஐனநாயகப் போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05ம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும், உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer