Friday, December 29, 2017

முத்தலாக் தடைச் சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் “முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா“ வை தயாரித்தது.

ஆனால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் “முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா“ நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.

முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வது ஜாமீனில் வர முடியாத குற்றமாக கருதப்பட்டு, அந்த பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. மேலும் இந்த மசோதாவின்படி, பேச்சு மூலமோ அல்லது எழுத்து மூலமோ அல்லது இ–மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவது சட்டவிரோதமானதும், செல்லாததும் ஆகும்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் (விவாகரத்து பெறும் பெண்) தனக்கும், தனது மைனர் குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகை பெற மாஜிஸ்திரேட்டை அணுகவும், மைனர் குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள மாஜிஸ்திரேட்டை நாடவும் இந்த மசோதா வகை செய்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer