Wednesday, December 27, 2017

முழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அலுவலகம்... சிறிய அறை... நடுவில் ஒருவரை ஒருவர்  பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கண்ணாடி அடைப்பு... அணிந்து சென்ற உடைகளை மாற்றச் சொல்லிவிட்டார்கள். தாலி, குங்குமம் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.  பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவனை ஒரு மனைவியும், தன் மகனை ஒரு தாயும் சந்தித்த நிகழ்வு.  தடுமாற்றமான அளவான பேச்சு, தளர்ந்த உடல், எலக்ட்ரிக் ஷாக் முதல் பலவகை சித்ரவதைகள் செய்யப்பட்ட அடையாளங்கள் என கணவரைக் கண்டதில் கண் கலங்கினார் அவர்.

இந்திய  முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானை  உளவு பார்த்ததாகவும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையை தூண்டியதாகவும் குற்றம்சாட்டி,  பாகிஸ்தான் ராணுவம்  சென்ற ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. பின்னர் பாகிஸ்தான் இராணுவ நீதி மன்றம் இவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சர்வதேச  நீதிமன்றம்   வரும் மே மாதம் வரை ஜாதவின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற  தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஜாதவ் வீடியோ மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 22 மாதங்களுக்கு பிறகு தன் குடும்பத்தை சந்தித்துள்ளார் ஜாதவ்.  இவ்வாறு பாகிஸ்தானிடம்  சிக்கிய  முதல் இந்தியரல்ல குலபூஷண். ஏற்கனவே பலரும் பல காரணங்களால் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலர்...

சரப்ஜித் சிங்

சரப்ஜித் சிங், அமிர்தசரசை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. இவர் குடிபோதையில் இந்திய எல்லையைத்  தாண்டி  பாகிஸ்தான் எல்லைக்குள் வழி தவறி சென்றுவிட்டார். இதனைப்  பார்த்த  பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்  கசூர் பகுதியில்  சரப்ஜித்தை   கைது செய்தனர் .  இவர், பாகிஸ்தானில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்றும்  இவரால் 14 பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும்   பொய்யாக  குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம்  தூக்குதண்டனை விதித்தது.  பின்னர் தண்டனை தள்ளிவைக்கப்பட்டு  22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். பின் இந்தியாவின் முயற்சியாலும் அவரது குடும்பத்தாரின் முயற்சியாலும் விடுதலையாக இருந்தவர் . 2013 மே மாதம் சிறை கைதிகளால் தாக்கப்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு 1 கோடி ரூபாயும் இந்திய அரசு 25 லட்சம் ரூபாயும்  வழங்கியது . இவரின் வாழ்க்கை  சரப்ஜித் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய், ரண்டீப் ஹீடா நடிப்பில் வெளிவந்தது.

காஷ்மீர்  சிங்

காஷ்மீர் சிங்  1973 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ராவல்பண்டியில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய இராணுவத்தில் சில ஆண்டுகள்  பணிபுரிந்த பின்னர் பாகிஸ்தான் சென்று  இந்திய உளவாளியாக மாதம் 400 ரூ சம்பளத்தில்  வேலை செய்தார்.  பாகிஸ்தானிற்கு இப்ராகிம்,என்ற பெயரில் உளவு பார்க்க சென்றவர், அவர்களால்  அடையாளம் காணப்பட்டு 35 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் 2008 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் இருந்த கடைசி நொடி வரை, எவ்வளவு சித்ரவதைக்குப் பின்னரும் தான் ஒரு உளவாளி என்பதை ஒத்துக்கொள்ளாமல் இருந்தவர், பின்னர் இந்தியா வந்து பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ரவீந்திர கௌஷிக்

ரவீந்திர கௌஷிக் இந்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு  ஒரு ஆதர்சமாகத்  திகழ்பவர். இவர்  இந்தியாவில் (RAW) பிரிவில் பயிற்சி பெற்று 1975 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று பின்னர்  'நபி  அகமத் ஷாகிர்' என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்து அங்கு மேஜர் பொறுப்பு வகித்து, இந்திய உளவாளியாகப்  பணியாற்றினார். 1979 முதல் 1983 வரை இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத்தின்  ரகசிய தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  காசநோயினால் பாதிக்கப்பட்டு பின்னர்  2001 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.  இவரது  வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு  இந்தியில் "ஏக் தா டைகர் " திரைப்படம் சல்மான்கான் மற்றும் கத்ரினா கைப் நடிப்பில் வெளிவந்தது . 

ஷேக்  ஷமீம்

1989  ஆம் ஆண்டு ஷேக்  ஷமீம் என்பவர் இந்திய பாகிஸ்தான் எல்லை அருகில்  கையில் தொலைத்தொடர்பு கருவியுடன் இருந்ததால்   பாகிஸ்தான் இராணுவத்தால்  இந்திய உளவாளி என்று கைது செய்யப்பட்டார். பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 1999 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் . இந்தியா இதுவரை கைது செய்யப்பட்ட   பாகிஸ்தான் உளவாளிகளில் ஒருவரையும்  தூக்கிலிட்டதில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer