Thursday, December 28, 2017

ஜனவரியில் ரஷ்யாவின் சோச்சி நகரில் அந்நாடு மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர். சிரிய அரசுக்கு ஆதரவாகத் தம்மை திசை திருப்பும் முயற்சியே இது என இதற்கு கிளர்ச்சியாளர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா பேரவையின் ஜெனீவா பேச்சுவார்த்தையில் தம்மைப் பங்கேற்கச் செய்யும் ரகசியத் திட்டம் இதுவென்றும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கஜகஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற 2 நாள் பேச்சுவார்த்தையில் சிரிய அரச பிரதிநிதிகள், கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு ஆகியவற்றுடன் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாக பல இடங்களில் சமாதானத்தை அமுல் படுத்துவது, போரினால் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் கொண்டு சேர்ப்பது மற்றும் போர்க் கைதிகளை விடுவிப்பது ஆகியவை தொடர்பில் கலந்தாலோசிக்கப் பட்டது. இதன் முடிவின் போதே ஜனவரி இறுதியில் சோச்சி நகரில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது என்ற முடிவு எட்டப் பட்டது. ஆனால் அதில் சிரிய அரசு பங்கேற்க உடனடி சம்மதம் தெரிவித்த போதும் கிட்டத்தட்ட 40 கிளர்ச்சிக் குழுக்கள் இதனைப் புறக்கணித்துள்ளன. இதில் அமெரிக்க உதவி பெறும் குழுக்களும் அடங்குகின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer