Tuesday, December 19, 2017

சென்னை ஃபோர் ஃபிரேம் தியேட்டரில் ‘பால் பாண்டி’ குறும்பட வெளியீட்டு விழாவில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை-17 ந்தேதி திரையிடப்பட்டது. சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறை கலைஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினார்கள்.

குறும்படங்கள் என்றாலே கருத்தூசி போட்டு கண்கலங்கவைக்கும் காலக்கட்டத்தில் காமெடி ஷார்ட் ஃபிலிம் பண்ணவேண்டும் என்று முயற்சித்த அஸ்வினிக்கு கங்கிராட்ஸ். தயாரிப்பாளரிடம் ஒரு கதையைச்சொல்லி ஓ.கே. வாங்குவது என்பது முள்ளம்பன்றியை பிரசவிப்பதற்கு சமம். அந்தவகையில், வாய்ப்புக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கும் இயக்குனர் பால்பாண்டியிடம் படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ‘நீ முதலில் குறும்படத்தை எடுத்துக்காட்டு… அப்புறம் பெரும்படத்தை எடுக்கலாம்’ என்று கண்டிஷன் போட (எனக்கென்னமோ கத சொல்லப்போன இயக்குனர் அஸ்வினியைத்தான் ஷார்ட் ஃபிலிம் பண்ணிக்காட்டுங்கன்னு புரடியூசர் கண்டிஷன் போட அத யாருக்கோ நடந்தமாதிரி கத பண்ணிட்டாங்களோன்னு தோணுது…சரி ரீலுக்குள்ள ரியல் வேணாம்) வேறு வழியில்லாமல் ஷார்ட் ஃபிலிம் எடுக்க முயற்சிக்கிறார் பால் பாண்டி.

ஆனால், அந்த ஷார்ட் ஃபிலிம்மை எடுக்க முன்வரும் தயாரிப்பாளரோ அதில் ‘நானே ஹீரோவாக நடிப்பேன்’ என்று கண்டிஷன் போட அவருக்கேற்றார்போல் என்ன ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம் என்று யோசிக்கிறது பால் பாண்டி அண்டு கோ. ரவுடி, பிக் பாக்கெட்காரன், பிச்சைக்காரன், லவ்வர்பாய் என நான்கு கெட்-அப்புகள் தயாரிப்பாளருக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் சொல்ல… நான்குபேரும் ரியல் லைஃபிலுள்ள ரவுடி, பிக்-பாக்கெட்காரன், பிச்சைக்காரன், லவ்வர்பாய்களை ஃபாலோ-அப் செய்து சொல்லுங்கள்...அதை வைத்து அவருக்கு என்ன கேரக்டர் கொடுக்கலாம்; குறும்படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம்’ என்று இயக்குனர் பால்பாண்டி கண்டிஷன் போட... நான்கு அஸிஸ்டெண்ட் டைரக்டர்களும் என்ன ஆனார்கள்? குறும்படத்தை இயக்கி பெறும்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததா? என்பதுதான் 'பால்பாண்டி' குறும்படத்தின் க்ளைமாக்ஸ்.

ரவுடிகள் கத்திகுத்து கந்தனையும் கபாலியையும் பின் தொடர்ந்து ஃபாலோ-அப் செய்யும்போது மாட்டிக்கொள்ளும் உதவி இயக்குனரை ‘போலீஸா நீ… ஃபாலோ-அப் பன்றியா?’ என்று மிரட்ட ‘காவல்துறை உங்கள் நண்பன்’என்று அச்சத்தில் கதறும் உதவி இயக்குனரைப்பார்த்து ‘மாமுல் கொடுத்தாத்தான்யா காவல்துறை நண்பன்…கொடுக்கலைன்னா எதிரி ஆகிடுவீங்களே”என்னும் காட்சியில் காவல்துறை யாருக்கு நண்பனாக இருக்கிறது? என்பதை காமெடியாகச் சொல்லி கலாய்க்கிறார்கள்.

“ரவி ரெண்டு எழுத்து… துணைக்கால் இருக்கிறதால மாலா நாலு எழுத்து அதனால நமக்குள்ள ஒத்துவராது" என்று சொல்லி காதலனை கழட்டிவிடும் காட்சியில்... ‘ஹூம் கழட்டி விடணும்னு முடிவு பண்ணிட்டா பொண்ணுங்க என்னக் காரணத்தை வேணும்னாலும் சொல்வாளுங்க’ என்று கமேண்ட் பறக்கிறது பாய்ஸுகளிடமிருந்து.

‘அம்மாவை விட்டுட்டு அப்பா வேற ஒருத்திகூட போய்ட்டாரு. அம்மா என்னை விட்டுட்டு வேற ஒருத்தன்கூட போய்ட்டாங்க. பிராத்தல் பண்ண மனசில்ல. திருடுறது கெத்து' என்கிற பிக்பாக்கெட்காரி நம் இதயத்தையும் திருடிவிடுகிறாள். ஆனால், காதலனை கழட்டிவிடும்போதுகூட அவனிடமிருந்து நகையை வாங்கிக்கொண்டு கழட்டிவிடும் மாலாக்காள்தான் உண்மையான பிக்பாக்கெட்காரிகள் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குனர் அஸ்வினி.

கிளைமாக்ஸில் பிச்சைக்காரனாக வருபவர் சில்லறைக்காசுகளை அள்ளி வீசுவதுபோல் நம்மை சிரிக்கவைத்துவிடுகிறார். ஏமாந்துபோய் நிற்கும் பால்பாண்டி கடைசிவரை பலான பாண்டியாகவே…! எது எப்படியோ சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வரும் அஸ்வினிக்களுக்கும் அந்த டீமிற்கும் பாராட்டுக்கள். இந்த குறும்படத்தை காண்பித்து இயக்குனர் அஸ்வினிக்கு பெரும்படம் கிடைக்க வாழ்த்துகள்:)

0 comments :

Post a Comment

 
Toggle Footer