Friday, December 29, 2017

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஷைட்டிக்களின் கலாச்சார மையம் ஒன்றிட்கு அருகே மேற்கொள்ளப் பட்ட பல குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 40 பொது மக்கள் கொல்லப் பட்டும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இத்தாக்குதல் திட்டமிடப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தான் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் நஸ்ரத் ரகிமி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததன் 38 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரவென்றே குறித்த கலாச்சார மையத்தில் ஓர் மாநாடு ஒழுங்கு செய்யப் பட்டிருந்ததாகவும் இதன் போதே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆப்கானில் அண்மைக் காலமாக தலிபான்களாலும் ISIS தீவிரவாதிகளாலும் பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் பல பகுதிகள் பொது மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான இடங்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யேமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் மேற்கொண்டு வரும் வான் தாக்குதல்களில் ஒரே நாளில் மாத்திரம் 68 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் இதில் 8 குழந்தைகள் அடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. யேமெனில் இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை ஐ.நா சபை தொடர்ந்து கண்டித்து வருகின்றது.

மறுபுறம் புதன்கிழமை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் அடையாளம் தெரியாத குண்டு ஒன்று வெடித்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலின் பின்னணி தெரியாத நிலையில் ரஷ்ய போலிசார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer