Sunday, December 3, 2017

'ஒவ்வொருத்தரும் மனசுல தோன்றத மறைக்காம வெளில பேச ஆரம்பிச்சா இந்த உலகத்துல உத்தமன்னு  ஒருத்தனும் இருக்க மாட்டான்'  என்று   ஒவ்வொரு  உத்தமன்  மனதிலும் இருக்கும் திருட்டுப் பயலை பற்றி பேசும் படம் தான் 'திருட்டுப்பயலே 2'.  பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் தூரமாக்கிவிட்டு, தெரியாதவர்களையெல்லாம் நெருங்கச்செய்திருக்கும் சமூக ஊடகங்களுக்கும், அதன் சில விஷயங்கள் தரும் சிறிய சந்தோஷங்களுக்கு அடிமையாவதால் நிகழும் பிரச்சனைகளையும் பேசியிருக்கிறார் சுசி கணேசன். 'ஒருவரின் ஒழுக்கம் மீறிய ரகசியம், இன்னொருவரிடம்  சிக்குவது'  என்ற திருட்டுப்பயலே 1ன் அடித்தளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நிகழ் காலத்தின் நிலவரத்தை  கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.

செல்வம் (பாபி சிம்ஹா), முக்கிய புள்ளிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டு, தகவல் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரி. அந்த வேலையை  பயன்படுத்தி, தனக்கென கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளும் 'ஹானஸ்ட் கரப்ட்' போலீஸ்காரர் அவர். அப்படி பல அழைப்புகளை கேட்கும்போது 'பால்கி (எ) பாலகிருஷ்ணன்' (பிரசன்னா) என்ற ஃபேஸ்புக் பிளேபாயின் அழைப்புகளை கேட்க நேரிடுகிறது. அவனது விளையாட்டு செல்வத்தின் மனைவி அகல் (அமலா பால்) வரை நீண்டிருப்பது தெரிய வரும்பொழுது துவங்குகிறது ஆட்டம். மனைவிக்கு தெரியாமலே அவனை அடக்க நினைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் பாபி, தன் ரகசியங்களால் அவனிடம் சிக்கிக்கொள்கிறார்.  இறுதியில் வென்றது எந்த திருட்டுப்பயல் என்பது தான் திரைக்கதை.

திருமணத்திற்கு முன்பே, 'உங்கப்பா மாப்பிள்ளை தேடுறாரு, நீ ஒரு பிரெண்டை தேடுற' என்று நட்பை விரும்பும் பாத்திரமாக அமலாவின் பாத்திரத்தை வடிவமைத்தது, நேர்மையை கைவிடும் பாபி, அரசு உளவுத்துறையின் விவரங்கள் என கதையின் அடுக்குகளை அழுத்தமாக எழுதியிருக்கிறார் சுசி கணேசன். கதாநாயகன் முழு நாயகனில்லை, பாதி வில்லனாக இருக்கிறான், வில்லன் அதீத வில்லத்தனத்துடன் இருக்கிறான் என வித்தியாசமான விளையாட்டு இது. இதன் அடிப்படையில் வரும் இடைவேளை திருப்பம் 'செம'. இரண்டு திருட்டுப்பயலுக்கும்  நடக்கும் ஆட்டம் சுவாரசியமாக செல்லும்போது, திடீரென வெளிநாடு செல்லும் தைரியம் எப்படி வருகிறது? திரைக்கதையில் இவ்வளவு சுதந்திரம் எடுத்துக்கொண்டது சரியா சுசி கணேசன்? அந்தப் பகுதி அயர்ச்சி உண்டாக்குகிறது. அது போல், சமீபமாக, தமிழ் படங்களில், எதை வேண்டுமானாலும் ஹேக் செய்து விடமுடியும் என்பது போல கட்டப்படுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் போல... அளவு மீறி போகிறது. அந்த டிடக்ட்டிவ் கதாபாத்திரம் தேவையா? சரி, தேவையென்றால் அதில் சுசி கணேசன் நடிக்க வேண்டுமென்பது தேவையா? சரி, அதுவும் தேவையென்றால், அதற்கு இப்படி ஒரு பில்ட்-அப் இசையும் அறிமுகமும் தேவையா?

பிரசன்னாவை 'ஃபைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகப்படுத்திய சுசி கணேசன், இப்பொழுது இன்னுமொரு நல்ல வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். 'அகல் மா, அகல் மா' என்று ஆச்சரியமாக்குகிறார் பிரசன்னா. தோற்றமும் நடிப்பும் மிகச்சிறப்பு. அடுத்தது, முதலில் வெகுளியாகவும், தெரியாமல் மாட்டிக்கொண்டு துடிக்கும்போதும் ஜொலிக்கிறார் அமலா பால். இந்த நடிப்பு  வரிசையில் மூன்றாவதாகத்தான் வருகிறார் பாபி. தேசிய விருது வாங்கிய பின்  தொடர்ந்து வந்த மிக சுமாரான படங்களை விட நல்ல வாய்ப்பான இதிலும் சற்று தொய்வாகவே தென்படுகிறார். இவர்களைத் தவிர கவனிக்க வைப்பவர்கள் உயரதிகாரியாக நடித்திருக்கும் முத்துராமன் மற்றும் பினாமி சேட்டாக வரும் பிரதீப். 'உலகத்துலயே கஷ்டமான விஷயம், பினாமி அனுவபவிக்குறதை ஓனர் பாக்குறதுதான்', 'நமக்கு தெரிஞ்ச 2000 பேர் தான் நம்ம உலகம், அதுக்கு பயந்துதான் தீக்குளிக்குறதும் விஷம் குடிக்குறதும்' என சுரேந்தர்நாத்தின் உதவியுடன் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அழுத்தம்.  வித்யாசாகரின் இசையில் இரண்டு மெலடிகள் மென்மையாக இருக்கின்றன, ஆனால் படத்தை தடுக்கின்றன. பின்னணி இசை தேவையானதை தந்திருக்கிறது. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் படத்தை கொடுத்திருக்கும் விதம் சிறப்பென்றாலும், திரைக்கதையிலேயே உள்ள நீளம் பாதிக்கிறது. செல்லதுரையின் ஒளிப்பதிவில் மனிதர்களின் இருள் பக்கங்கள் நன்றாக பதிவாகியிருக்கிறது.

வெகு சில தேவையில்லாத விஷயங்களைத் தாண்டி பல சிறப்புகளை கொண்டுள்ளது   'திருட்டுப்பயலே 2'.

0 comments :

Post a Comment

 
Toggle Footer