Thursday, November 23, 2017

ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு அதிபர் ஹசன் றௌஹானி உரையாற்றுகையில் ISIS இன் முடிவை பிரகடனப் படுத்தியதுடன் இப்போரில் மடிந்த ஈரானிய வீரர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இன் வேரும் அடித்தளமும் அழிக்கப் பட்டுள்ள போதும் எஞ்சியுள்ள அதன் போராளிகளை அழிக்கும் வரையில் அங்கு யுத்தம் தொடரும் எனவும் றௌஹானி குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் ஈரானின் புரட்சிப் படையின் மூத்த தளபதியான மேயர் ஜெனரல் கஸ்ஸெம் சொலைமானி என்பவரும் அங்கு ISIS தோற்கடிக்கப் பட்டதை உறுதி செய்துள்ளார்.

ISIS இற்கு எதிராக சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துடனும் ஈராக்கில் அதன் அரச படைகளுடனும் இணைந்து வெகு காலமாகவே ஈரானின் புரட்சிப் படை போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த யுத்தத்தில் இவ்விரு நாடுகளிலும் முக்கிய தளபதிகள் உட்பட ஆயிரக் கணக்கான ஈரான் போர் வீரர்கள் இதுவரை மடிந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த வார இறுதியில் சிரியாவில் ISIS வசம் இருந்த இறுதி முக்கிய நகரான அல்பு கமால் கூட்டணிப் படைகள் மற்றும் ஈரானிய படைகளால் கைப்பற்றப் பட்டதை அடுத்தே ISIS இன் தோல்வி உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதேவேளை சிரிய போரில் ISIS இற்கு ஆதரவாக செயற்பட்டதாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் குற்றம் சாட்டிய றௌஹானி யேமென் யுத்தத்தில் கொல்லப் பட்டு வரும் அப்பாவிப் பொது மக்கள் குறித்து அரபு தேசங்கள் வாய் திறக்காது இருப்பதையும் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer