Wednesday, November 15, 2017

இந்திய பன்மொழி திரைப்பட நடிகையான 'பானுமதி ராமகிருஷ்ணா', தமிழ் சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர். 1939 ஆம் ஆண்டு  வர விக்ரயம் (Vara Vikrayam)  என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த  'இப்படியும் ஒரு பெண்' படத்தில் முதல் பெண் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் காலூன்றுகிறார். அதற்க்கு முன் 1954 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சக்ரபாணி என்ற படத்தில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும்  இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

(கணவர் ராமகிருஷ்ணா ராவ், பானுமதி)

 பானுமதி, அவரது கணவர் ராமகிருஷ்ணா ராவ் இருவரும் இணைந்து பரணி பிக்சர்ஸ்  என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தனர். அப்போதைய சினிமா காலகட்டத்தில் பரணி பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரபலமான ஒன்றாகும். தமிழில் வரலாற்று திரைப்படமான லைலா மஜுனு, மணமகன் தேவை, காணல் நீர் போன்ற படங்களை தயாரித்துள்ளனர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் பானுமதி.

(பவதாரிணி  இளையராஜா)

இசையமைப்பாளரும், பின்னணி பாடகியுமான பவதாரிணி  இளையராஜா, நடிகை ரேவதியின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற பன்மொழிகளில் வெளிவந்த மித்ர, மை ஃப்ரெண்ட்  (Mitr, My Friend) திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த அமிர்தம், 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த வெள்ளச்சி, போரிட பழகு போன்ற திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் பவதாரிணி. 'பாரதி' படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக தேசிய விருது பெற்ற இவர் சமீபத்தில் அனேகன் படத்தில் இடம்பெற்ற "ஆத்தாடி... ஆத்தாடி.." வரை அவ்வப்போது பாடி வருகிறார்.

(ஏ.ஆர்.ரேஹானா)

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதிரி ஏ.ஆர்.ரேஹானா, " 'விடை கொடு எங்கள் நாடே' , 'பல்லே லக்கா' " போன்ற வெற்றிப்  பாடல்களை பாடியிருந்தாலும், ஒரு பெண் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்டுத்தி கொண்டது  2004 ஆம் ஆண்டு வெளிவந்த 'மச்சி' படத்தின் மூலம் தான். அதன்பின்  'கடைசி பக்கம்', 'ஆடாத ஆட்டமெல்லாம்' போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

(ஸ்ருதிஹாசன்)

ஹாசன் குடும்பத்தில் பிறந்தவரும், மூத்த நடிகர்கள் கமல் - சரிகா அவர்களின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஸ்ருதி முதன்முதலில் நடிகையாக  அறிமுகமானது ஹே ராம் படத்தில் வல்லபாய் பட்டேலின் மகள் கதாபாத்திரத்தில் தான். உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு 'எடிசன் விருதுகள்' சிறந்த அறிமுக  இசையமைப்பாளர் என்ற  விருதும் பெற்றிருக்கிறார்.

(சிவாத்மிக்கா)

அறிமுக இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருக்கும் திரைப்படம் தான் அந்தோணி (Antony). அப்பா, மகன் இருவருக்குமான உறவைப் பற்றி மியூசிக்கல் எமோஷனல் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் குமார். இப்படத்தின் இசையமைப்பாளராக கே.எம்.மியூசிக் கல்லூரியில் படித்த 19 வயது இளம் பெண்ணான சிவாத்மிக்கா இசையமைத்திருக்கிறார்.

சிவாத்மிக்கா கோவையைச்  சார்ந்தவர். இவர் தன் +12 முடித்த பிறகு, இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையில் உள்ள  ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.மியூசிக் கல்லூரியில் இசை பயிற்சி பெற்றார். இதுபற்றி சிவாத்மிக்கா கூறுகையில், " நாம் யாரிடமாவது உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால், அனைவரும் முதலில் சொல்வது ஒரு ஆணுடைய  பெயர் தான்.  என்னிடம் கேட்டாலும் நானும் ஒரு ஆணுடைய பெயரைத்தான் குறிப்பிடுவேன். 62 கோடி பெண்கள் இருக்கும் இந்த நாட்டில் நாம் குறிப்பிடும்  முதல் ஐந்து சிறந்த இசையமைப்பாளர்களில் ஒரு பெண்ணின் பெயர் கூட இல்லை  என்பது ஏன்..? ".

(தாயார் சங்கீதா ராஜேஷ், சிவாத்மிக்கா ராஜேஷ்)

ஒரு பெண் இசையமைப்பாளராக இருப்பதே எனக்கு பெருமை என்று சொல்லும் சிவாத்மிக்கா ராஜேஷ்.

ஆண் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த சினிமா துறையில், ஒரு பெண் இசையமைப்பாளராக உருவாவது இன்றும்  கூட அரிதான  ஒன்றாக இருக்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள நபர்களை தவிர ஒரு சில பேர் ஒன்று அல்லது இரண்டு, மூன்று  படங்களுக்கு மேல் இசையமைப்பாளராக நீடித்தது இல்லை. மற்ற துறையில் தங்களை முன்னிலைப்படுத்தி சாதித்து  கொண்டிருக்கும் பெண்கள், இசைத்துறையிலும் தங்களை பெண் இசையமைப்பாளர்களாக முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer