Wednesday, November 15, 2017

காய்ந்து வறண்ட நிலத்தின்  பாதையின் வழியே, தண்ணீர் பிடிக்க, காலி குடங்களோடு   இரு சக்கர வண்டியில் செல்லும் குடும்பம்  பெட்ரோல் தீர்ந்து நிற்க, வழியில் வரும் மருத்துவ  அதிகாரி, அவர்களது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றி, அதை புகைப்படம் எடுக்கிறார். அதனை   விளம்பரமாக வெளியிடுகிறார்கள் அதிகாரிகள். எதற்காக விடப்படுகிறதென்றே தெரியாத ராக்கெட், நம் நாட்டிலிருந்து  விண்ணுக்கு செலுத்தப்படுவது தங்கள் வெற்றியென எண்ணி, இனிப்பு கொடுத்து, சாமி கும்பிட்டுக் கொண்டாடுகிறார்கள் அருகாமை கிராம எளிய மக்கள். அரசும் அதிகாரமும் அடையாளமில்லா  மக்களை எப்படிப்  பார்க்கிறார்கள், எளிய மக்கள் அவர்களை எப்படிப்  பார்க்கிறார்கள் என்பதை நேராகச் சொல்கின்றன இந்த இரு காட்சிகள். உலகின் செயற்கைகோள்களையெல்லாம் விண்ணுக்கு அனுப்ப  ராக்கெட் விடும் நாட்டில் மனிதக் கழிவை இன்னொரு மனிதன் தான்  அள்ள வேண்டியிருக்கிறது, அலட்சியமாக விடப்பட்டிருக்கும்  ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்தால் கயிற்றைக் கட்டித் தூக்க வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியலும், பெருகி வரும் விஞ்ஞானமும், இயங்கி வரும் அரசுகளும் யாருக்கு என்ற கேள்வியை உரக்கக் கேட்கிறது 'அறம்'.

பின்புலமில்லாத எளியதொரு குடும்பத்தில் ஒரு உயிருக்கு ஆபத்து வரும்பொழுது, அதற்கான உதவியை அரசியல் இடையூறுகள் தாண்டி, அறத்தின் பக்கம் நின்று ஒரு அதிகாரி செய்வது தான் படம்.  'மக்கள் தான் அரசாங்கம்னு   நான் நினைக்கிறேன்' என்று சொல்லும் தீர்க்கமும், மக்களின் மேல் அன்பும் நிறைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவதனியாக நயன்தாரா.  கலர் கலர் உடைகளும், கவர்ந்திழுக்கும் நடனமும்  இல்லாத இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப நடித்துமுள்ள நயன்தாராவுக்கு பெரிய பூங்கொத்து. கண்டிப்பாக இது நயன்தாராவின் திரைப்பயணத்தில் பதித்திருக்கும் முக்கியத் தடம். தாராளமாக 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கலாம். ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தை என்ற ஒரு விஷயத்தைச் சுற்றி, அவை தோண்டப்பட்ட காரணம், ஒரு குடம்  நீருக்காக மக்கள் படும் பாடு, நீர் மாசுபட்ட காரணம், என மக்கள் அரசியலை 360 டிகிரியில் பேசியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார். சர்ச்சைகளைத் தாண்டி வந்து முதல் படத்திலேயே  வென்றிருக்கிறார். இத்தனை அரசியலையும் மதிவதனி என்ற  ஒரு பெண் அதிகாரி வாயிலாக, பேச வைத்திருப்பது இன்னும் சிறப்பு.

நயன்தாரா ஒரு புறமிருக்க, ராமச்சந்திரன் துரைராஜ், சுனுலட்சுமி, 'காக்கா முட்டை' விக்னேஷ், ரமேஷ், அந்தப் பெண் குழந்தை என அத்தனை பேரும் இயல்பாக நடித்து, நம் உள்ளே வந்து, பின்னர் அங்கு ஒரு துன்பம் ஏற்படும் போது நம்மையும் பதற வைத்துள்ளனர். ஊர் இளைஞராக  பழனி, எம்எல்ஏ வாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு. ஆழ்துளைகிணற்றின் ஆழத்தையும் உள்ளே குழந்தை அனுபவிக்கும் கஷ்டத்தையும் முழுதாக உணர வைத்திருக்கிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. வறண்ட பூமியின் வெம்மையைக் கடத்தியிருக்கிறது. அரசியல் பேசும் படம், தரத்தில் குறைவாக இல்லாமல் சிறப்பாக உருவாக உறுதுணையாக இருந்திருக்கிறார் ஓம் பிரகாஷ்.  ஒரே நாளில் நடக்கும் கதை, ஒரு சம்பவத்தை மிக விலாவாரியாக சொல்லும் திரைக்கதை, இந்த நிலையில் சற்றும் தொய்வில்லாமல் தொகுத்திருக்கிறார் ரூபன். ஜிப்ரானின் இசை ஆரம்ப காட்சிகளில் சற்று அதிகாமாகத் தோன்றினாலும், முக்கிய கட்டம் வந்த பிறகு, சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. காட்சிகளுடன் இணைந்து ஒரு த்ரில்லர் உணர்வையும், பின்னர் பாத்திரங்களின் பதைபதைப்பையும் மிக ஆழமாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

பேச நினைக்கும் அரசியலை ஒட்டு மொத்தமாக ஒரே படத்தில் பேச நினைத்ததும், பரபரப்பான காட்சிகளிடையே சுவாரசியமும் இல்லாமல் அழுத்தமும் இல்லாமல் வரும் தொலைக்காட்சி  விவாத நிகழ்ச்சியும் படத்தின் தடைகள். படம் தொடங்கி முக்கிய பிரச்சனைக்கு வரும் வரை வெவ்வேறு விஷயங்கள் பேசப்பட்டுக்கொண்டே இருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி பின்  தெளிகிறது. இறுதியில் மதிவதனி  அரசியலில் நுழைவது போன்ற முடிவு, சற்று அவசரமாக நுழைத்தது போலத் தோன்றுகிறது. சிறு குறைகள் போக, செய்தியாய்க் கடக்கும்  விஷயங்களின் தீவிரத்தை, குழப்பமில்லாத சரியான அரசியலுடன் பேசியிருக்கிறது அறம்.

மக்கள் பிரச்சனைகளை சமரசமில்லாமல் பேசும் படைப்புகள் வரம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer