Wednesday, November 22, 2017

இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆகவே மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய நாளில் மாங்குளத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு மாதமாக சிங்கள முகாமை தாக்குவதற்கான பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்த, சண்டையில் பங்குபற்றிய பெண்கள் படையணியில் இருந்த இருக்கின்ற இந்த போராளியின் (தேவா) பதிவு இங்கு தரப்படுகின்றது.

ஒரே வகுப்பில் 13 போராளிகள் அதில் 09 மாவீரர். 75 பேர் கொண்ட அணியில் 2 பேர் தான் தப்பினார்கள். என்றாலும் அவர்களுக்காக அந்த காலப்பகுதியில் வீரஅணக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை ஆம் அதுதான் இந்த பதிவின் முக்கியம்.

1989 ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்தது எங்கள் தேசம் அதே நேரம் எந்தவித பிரச்சாரமோ அன்றி நிகழ்ச்சிகளோ இடம்பெறாமலேயே தாயகத்தின் பல இடங்களில் இருந்தும் புதிய போராளிகளாக இளைஞர்கள் யுவதிகள் தம்மை இணைத்தவண்ணம் இருந்தனர். அந்த காலப்பகுதியில் இயக்கத்திற்கு இணைந்து ஒழுங்காக பயிற்சி முகாமுக்கு காட்டுக்கு செல்வதென்றாலே ஒரு போராட்டம் தான். அதே நேரம் பெற்றோர்களின் பார்வையில் படாமல் செல்வது முதலாவது களம். இந்திய இராணுவம் அடிக்கடி சுத்தி திரிவதால் வீட்டில் இருந்து வெளியில் கண்டபடி வெளிக்கிட பெற்றோர்கள் விடுவதில்லை. எனவே இயக்கத்திற்கு போவது பற்றி கூடி முடிவு எடுப்பது பாடசாலையில் ஆகும். முடிவு எடுத்தபின் இயக்கத்திற்கு போக புறப்படும் நாளாக கோயில் திருவிழா அல்லது ஊரில் டி.வி. இல் சினிமா படம் ஓடும் நாள் அல்லது ஏதாவது விசேட நாட்கள் தான் தெரிவு செய்யவேண்டும் அப்படி எண்டால்தான் பெற்றோர்கள் கண்ணில் படாது செல்லமுடியும்.

அவ்வாறு 1989 ம் ஆண்டு முற்பகுதியில் எங்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் 05 பேர் பெண்கள் முடிவு எடுத்து ஒரு அணியாக இயக்கத்திற்கு சென்று விட்டோம் அதன் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் எமது வகுப்பில் படித்த் 13 பேர்வரை இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள். நாங்கள் எமது கிராமத்தில் இருந்து படகு வழியாக சென்று செம்மலையில் இறங்கி அதன் பின்னர் காட்டிற்குள் நடந்து போகவேண்டும். ஆனால் வடமராட்சி கிழக்கில் இருந்து எம்மை ஏற்றிக்கொண்டு படகு பருத்துறை பக்கமாக சென்றது எமக்கு அதிசயமாக இருந்தது ஆனால் கேள்வி கேட்கவில்லை.

பருத்தித்துறையினை படகு அடைந்ததும் நாங்கள் இறங்கினோம் இறங்கி ஒரு வீட்டில் இரவு இருந்துவிட்டு விடியகாலையிலேயே வல்வெட்டிதுறை நோக்கி நடக்கதொடங்கினோம் நான் நினைக்கின்றேன் ஒரு குச்சு ஒழுங்கையும் மிச்சமில்லை எல்லா இடமும் அளந்து கட்டிகொண்டு போனோம். எல்லா இடமும் இந்திய இராணுவம் அதனால்தான் சுத்தி சுத்தி நடந்தோம். வல்வெட்டிதுறை சென்றதும் அன்று இரவே மீண்டும் படகில் ஏறி செம்மலை அடைந்தோம். எம்மைஅழைத்து சென்றோர்கள் இன்று மாவீரர்களாகவும், முகமறியா கரும்புலி மாவீரர்களாகவும் ஆகிவிட்டார்கள்.ஒருவர் மட்டுமே போராளியாக இன்னமும் இருக்கின்றார்.

செம்மலையில் இருந்து காட்டிற்கு பயிற்சி முகாம் நோக்கி நடக்க தொடங்கினோம் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடை சாப்பிடுவதற்கு மட்டும் கொஞ்ச நேரம் ஒரே நடைதான் கடற்பயணம், நடைபயணம் எல்லாமே புதிது ஆனாலும் எங்களுக்கு சோர்வு இருக்கவில்லை. சோர்வு காட்டினால் பயிற்சிக்கு கூட்டி செல்லமாட்டார்கள் என்ற பயம் வேறு. பயிற்சி முடிந்து சண்டைகள் பிடிக்க ஆரம்பித்தோம் இந்திய இராணுவத்துடன் இரண்டு சிறிய சண்டை பின்னர் சிங்கள இராணுவத்துடன் ஒரு சிறிய சண்டை அதனை தொடர்ந்து கொக்காவில், கோட்டை ஆகிய சண்டைகளுக்கு சென்ற பின்னர் பலாலி காவலரண் கடமையில் எல்.எம்.ஜி நிலையில் நின்றேன். இந்த காலப்பகுதியில் எனது வகுப்பு சக மாணவர்களான சிட்டு, நேசன், மாக்கிரட், எலெசபெத், வரதன்,அச்சுதன்,வெண்ணிலா,பத்தி, சாந்தி என போராளிகள் ஆங்காங்கே சண்டையில் நின்றார்கள்.சிலர் வீரச்சாவும் அடைந்தார்கள் லெப்ரினன்ட் மாக்கிரெட், 2ம் லெ எலிசபெத், லெப் நேசன், வெண்ணிலா போன்றோர் கோட்டை, கொக்காவில், பலாலி சண்டைகளில் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களது வீரச்சாவுக்கு என்னால் செல்லமுடியாது போய்விட்டது காரணம் களப்பணி. ஆனால் முதன் முதலாக எங்கள் கட்டுப்பாட்டில் மாவீரர்னாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடு நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். 1990 ம் ஆண்டு இதே நாளில் நெல்லியடி பாடசாலை, கரவெட்டி பாடசாலைகளில் மாவீரர் பெற்றோர்கள் கெளரவிக்கும் நிகழ்வு தடல்புடலாக நடக்குதாம் என்றும் கேள்வி பட்டேன். ஆகவே அந்த நாள் நான் சென்று எல்லா நண்பிகள் நண்பர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திவிட்டு அவர்களது பெற்றோரையும் சந்தித்து விட்டு வருவம் என்று பெரிய பிளான் போட்டு வைத்திருந்தேன்.

பலாலி காவலரணனில் நின்ற போது தான் மாங்குளம் முகாம் தாக்கி அழிப்பிற்காக பயிற்சிக்கு சென்றோம் செப்ரெம்பர் மாதம் மாங்குளம் காட்டுபகுதியில் ரட்னம் முகாமிற்கு சென்று இரண்டு மாதமாக பயிற்சி எடுத்தோம் அந்த முகாமில் இருந்தே 15 மைல்கள் காடுகளுக்கு ஊடாக நடந்து மாங்குளம் சண்டைக்கு வந்து சண்டை ஆரம்பமாகி அது வெற்றிகரமான தாக்குதலாக நிறைவடைந்தது. என்றாலும் என்னால் தாங்க முடியாத சோகமும் ,நெருடலும், குமுறலுமாக இருந்தேன்.

காரணம் முதலாவது 1990 இல் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாட களைகட்டி நின்றது தமிழீழம் ஆனால் என்னுடன் 10 வருடங்களாக படித்த எனது நண்பர்களின் வீரச்சாவுக்கு கூட போகவில்லை ஆனால் அவர்களுக்கு முதல்முறையாக வீரவணக்கம் கூட செலுத்த முடியவில்லை என்ற ஏக்கமும் தவிப்பும் எனது நெஞ்சத்தை உண்மையில் வாட்டி எடுத்தது.

அடுத்ததாக மாங்குளம் சண்டை களத்தில் நிற்கின்ற இடத்திலாவது வீரவணக்கம் செலுத்தலாம் என்று நினைத்தேன் அதுவும் முடியவில்லை வெற்றி ஒலியினை விட என் நெஞ்சம் வேதனை ஒலியினால் தவித்தது. ஏனென்றால் மாங்குளம் தெற்கு பக்க காவலரண்களை ஊடுருவி தாக்கியளித்து கைப்பற்றும் பொறுப்பு 75 பேர் கொண்ட எங்கள் பெண்கள் அணிக்கும் தரப்பட்ட முக்கியமான பணி. நான் பிறண் எல்.எம்.ஜி வைத்திருந்தேன் சண்டை அகோரமாகத்தான் இருந்தது. அணியில் ஒவ்வொன்றாக வீரச்சாவும் காயங்களும் என்றாலும் விடவில்லை நானும் இன்னொரு பெண்போராளியும் வேறு நான்கு ஆண்போராளிகளும் இறுதியாக மாங்குளம் கோவில் பக்க வலுவான காவலரணை தாக்கி அழித்து கைப்பற்றினோம் அதுதான் அந்த பக்கத்தில் இறுதி காவலரண்.

அதன்பின்னர் பின்னுக்கு சென்று தற்காலிக முகாமில் இருந்து அழுது கொண்டிருந்தேன் ஏனென்றால் இரண்டு மாதமாக நாங்கள் 75 பெண் போராளிகள் பயிற்சி எடுத்து எவ்வளவு சந்தோசமாக இருந்தது ஆனால் இன்று அவர்கள் இல்லை உண்மையில் அந்த சண்டையில் எங்கள் 75 பேரில் நானும் இன்னொரு பெண்போராளியும் தான் மிஞ்சினோம் 52 பேர் வீரச்சாவு ஏனையோருக்கு காயம்.

எனது வகுப்பில் ஒட்டு மொத்தமாக 13 பேர் போராளிகள் அதில் 09 பேர் வீரச்சாவு (பல சண்டைகளில்) இருவர் இருக்கின்றோம். ஒருவர் விலத்திவிட்டார். எனது பெண் போராளிகள் அணியில் 1990 ம் ஆண்டு இதே நாளில் வீரச்சாவு 52 பேர். ஆனால் இதே நாளில் 1990 ம் ஆண்டு என்னால் எவருக்குமே வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தேன். ஏன் இப்பவும் கூடத்தான் என் படையணி தோழிகளும் என் பள்ளி தோழிகளும் உறங்கும் அந்த ஆலயங்களுக்கு செல்லமுடியவில்லையே… ஆனால் நான் அவர்களை என்றோ ஒரு நாள் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையில் எனது பணியினை தொடர்கின்றேன்.

நன்றி தேவா

0 comments :

Post a Comment

 
Toggle Footer