Thursday, November 16, 2017

கடந்த திங்கள் இரவு சுமார் 8:45 மணி இருக்கும்...  சென்னை  ஆதம்பாக்கம்  சரஸ்வதி நகரில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில்,  உள்ள மற்ற வீடுகள் எல்லாம் சாத்தப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாதபோது, முதல் தளத்திற்கு ஆகாஷ் என்பவன் கையில் ஒரு   கேனுடன் செல்கிறான்.  அங்கு இருக்கும் இந்துஜாவின்  வீட்டில் நுழைந்து,   இந்துஜாவின் தாயார், தங்கையிடம்  'இந்துஜாவை எனக்கு  திருமணம் செய்து வையுங்கள்' என்று அழுதுள்ளான். முடியாது என்று சொல்லி மூவரும் அவனை வெளியே போகச் சொல்ல,  ஆகாஷ் வெளியில் வைத்து இருந்த கேனை எடுத்து அவள் மீது எண்ணையை ஊற்றி, சிகரெட் லைட்டர் மூலம் தீயிட்டுள்ளான்.அதனை பார்த்து அலறிய குடும்பத்தினர் மீதும் எண்ணையை ஊற்றி தீவைத்துவிட்டு, கீழே சென்று தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். இந்துஜா சம்பவ இடத்திலேயே உடல் வெந்து இறந்துள்ளார். அவரது தாயாரும் தங்கையும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐந்து வருட ஒருதலைக் காதல் அவனை இவ்வாறு செய்ய வைத்துள்ளது. தமிழகத்தில்  இது ஒன்றும் புதிதல்ல.

                                                            ஆகாஷ்

2013 ஆண்டு, இதே ஆதம்பாக்கத்தில்,  வித்யா, தன் காதலை மறுத்ததற்காக  விஜய பாஸ்கர் என்பவன்  ஆசிட் வீசியுள்ளான். சில நாட்கள் சிகிச்சை தோல்வியில் உயிரிழந்தார் வித்யா.  2012ஆம் ஆண்டு காரைக்காலில்  வினோதினி  தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் சுரேஷ் என்பவன்  ஆசிட் வீசினான். மூன்று மாத சிகிச்சைக்குப் பின் வினோதினி உயிரிழந்தார்.   2016 ல் கரூரில்   சோனாலி  என்ற பெண் காதலை ஏற்றுக்கொள்ள  மறுத்ததால் உதயகுமார் என்பவன்  கல்லூரிக்குள் சென்று  கட்டையால் அடித்து கொன்றுள்ளான். 2016ல் தூத்துக்குடி  பள்ளி ஆசிரியை  ஃபிரான்சினாவை   சர்ச்சிற்குள் சென்று கீகன் என்பவன்  அரிவாளால் வெட்டிக்கொன்றுள்ளான். இதுவும் காதல் மறுப்புக் கோபம் தான்.

வினோதினி

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொள்ளப்பட்ட ஸ்வாதியும், இதே காரணத்தால் தான் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. பின்னர், அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தான் கொலை செய்தவரா, கொலைக்கு காரணம் காதலா, என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு இறுதியில் கொலையான ஸ்வாதியே குற்றவாளி என்னும் அளவுக்கெல்லாம் விவாதிக்கத் தொடங்கியது முற்போக்கு சமூகம்.  காரணம் எதுவானாலும் ஒரு ரயில் நிலையத்தில், வேலைக்கு செல்லக் காத்திருக்கும் பெண் கொலை செய்யப்படுவது, கொலை செய்தவன் அனைவர் முன்னும் ஓடித் தப்பித்தது, இன்றும் நிலவும் மறைமுகத்  தடைகளை, கஷ்டங்களைத் தாண்டி வெளிவந்து படித்து பணிபுரியும் நம் பெண்களுக்கு, ஊரிலிருந்து வந்து சென்னையின்  விடுதிகளில் தங்கி பணிபுரியும் நம் இளைய மனங்களுக்கு எத்தகைய பயத்தை உருவாகியிருக்கும் என்பது உணரப்படவேண்டிய ஒன்று. இப்பொழுது மீண்டும் இது நிகழ்ந்திருக்கிறது.

ஸ்வாதி

பெண்களை இன்னும் உடைமைகளாய் பார்க்கும் மனநிலை தான் இப்படி செய்ய வைக்கிறது. காதல், உலகின் அற்புதங்களில் ஒன்று. பிரிவினைகளை எல்லாம் மறையச் செய்யும் வல்லமை கொண்டது. அதே நேரம், ஒருவருடைய காதல் எத்தனை உண்மையாய் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் பெண்ணின் முழு  உரிமை. மேலே கூறப்பட்டுள்ள அத்தனை கொலையாளிகளும் படிப்பை பாதியில் விட்டவர்கள், எந்த வேலையிலும் இல்லாமல் இருந்தவர்கள், ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருந்தவர்கள்.  'தன் காதல் மறுக்கப்படுவது  சுயமரியாதைக்கு இழுக்கு', 'தான் எப்படியிருந்தாலும் பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும்', 'டீக்கடை ராஜா', 'வேலையில்லாமல் இருந்துகொண்டு காதலிப்பது கெத்து' என்பது போன்றெல்லாம்  கற்பிக்கும் திரைப்படங்களும், 'எதுவானாலும் தூக்கிடலாம் வா' என்று உசுப்பேத்தும் உடனிருப்பவர்களும், முக்கியஸ்தர்களும் இதனை உணர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தான் 'நாடகக் காதல்' என்ற வர்ணிப்புகளுக்கு அடிப்படைக் காரணம்.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer