Thursday, November 23, 2017

ரன் வட்டி, ராக்கெட் வட்டி, மீட்டர் வட்டி என்று பல வட்டிகளை உள்ளடக்கிய கந்துவட்டி சமீபத்தில் நெல்லையில் பச்சை குழந்தை உள்பட ஒரு குடும்பத்தையே காவு வாங்கியது. அதுவும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் கண்ணெதிரே நெருப்பில் துடித்து சாகடித்தது. இதோ, கனவுத் தொழிற்சாலையில் பகிரங்கமாக ஆளை அடையாளம் காட்டிவிட்டு ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. சமீபத்தில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்துவும் அவருடைய மனைவி மற்றும் மகள்களும் அலுவலக வளாகத்திற்குள் தீ குளித்து எரிந்து சாம்பலாயினர். கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லாமல்தான் இந்த கொடூரமான முடிவுக்கு அவர் வந்தது அம்பலமானது. அதைத்தொடர்ந்து கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றன. அந்தக் கொடுமை, நினைவிலிருந்து அடங்குவதற்குள், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடத்தும் ‘கம்பெனி புரொடக்ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமைக்கு தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

இவர், நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகன். கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் இவர், பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்ட முடியாமல் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கிறார். இதையடுத்து, பைனான்சியர் அன்புச் செழியனின் ஆபாசமான மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல்  வீட்டில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன் அசோக்குமார் உருக்கமாக எழுதிய 2 பக்க கடிதம் கிடைத்தது.அக்கடிதத்தில் அசோக்குமார் குறிப்பிட்டிருப்பது...

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தான். எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தி உள்ளேன். சசிகுமாருக்கு நல்லது மட்டுமே செய்ய தெரியும். ஆனால் அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.இதுவரை 10 ஆண்டுகளில் எங்களது எல்லா தயாரிப்பு படங்களையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம் சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் கடன் வாங்கியதுதான். வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த 7 வருடங்களுக்கு மேல் வட்டி வாங்கியவர் கடந்த 6 மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடக்க ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்து கொண்டு என் வீட்டு பெண்கள், பெரியவர்கள் எல்லாரையும் தூக்கி விடுவேன் என்றார். அவர்களிடம் இருந்து சசிகுமாரை மீட்பதற்கு திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று அதில் கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தியினை அறிந்த திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவர்கள் கந்துவட்டிக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை பிடிப்பதற்கு தனி படை அமைத்துள்ளனர்.இந்நிலையில்,இந்தச் சம்பவம் குறித்து திரையுலகினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்...நடிகர் சசிகுமார்...

எனது நிழலாக இருந்தவர் அசோக்குமார். என்னுடைய படம், பணம் அனைத்தையும் அவர் பார்த்து வந்தார். இப்போது படம் ரிலீஸ் ஆகும் நேரம் பணப்பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இயக்குனர் அமீர்...

கடன்தொல்லையால் தயாரிப்பாளர்கள் தற்கொலை தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தமிழ் திரைத்துறையினர் இனியும் இதனை சரி செய்யவில்லை என்றால் சினிமா துறையை இழுத்து மூடி விட்டு எங்காவது சென்று விட வேண்டியதுதான். பாதிக்கப்பட்ட யாரும் வாய் திறந்து பேசுவது இல்லை. சினிமாவில் மட்டும் வீர வசனம் பேசுகின்றனர். வட்டிக்கு மேல் வட்டி வாங்கிவிட்டு, திரைப்பட ரிலீஸ் தேதியையும் நிறுத்தி வைத்தால் என்ன செய்ய முடியும்? இந்த பிரச்சினை குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிர்வாகிகளாக இருப்பதற்கே தகுதி இல்லை. சினிமா கார்பரேஷன் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பல காலமாக கூறிவருகிறேன். இப்போதும் அதையே வலியுறுத்துகிறேன்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்....

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி. இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு. காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள், இது தற்கொலைஅல்ல,கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக்குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

கந்துவட்டிக் கொடுமைக்கு இனியாவது அரசும் காவல்துறையும் முடிவு கட்டுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer