Tuesday, November 7, 2017

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இனி பேய்கள், ஆவிகளை நேரில் கண்டால் கூட பயப்படாமல் பேசிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் பேய் படங்களும், அந்தப் படங்களில் பேய்களும் படாத பாடு பட்டுவிட்டன. நகைச்சுவை, கவர்ச்சி நடனம், பேய்களுக்குள் சண்டை, நல்ல பேய் கெட்ட பேய், பேய்களை விரட்ட பாய், சாமியார், பாதிரியார், இப்படி பேய்கள் செய்யாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு பேய்களை செய்துவிட்டார்கள் நம் திரை படைப்பாளிகள். அப்படி இருக்கையில், பேய்களின் மானத்தைக் காப்பாற்றி நம்மை பயமுறுத்த, ‘உண்மைக் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட தூய திகில் படம்’ என்னும் அடையாளத்தோடு வந்திருக்கிறது ‘அவள்’. ‘பீட்சா’, ‘யாவரும் நலம்’, ‘மாயா’ போன்ற வெகு சில, கலப்படமற்ற திகில் படங்களின் வரிசையில் கண்டிப்பாக வைக்கலாம்.

ஒரு மகிழ்ச்சியான சீன குடும்பத்திற்கு நடக்கும் கோரத்தை கொஞ்சமாகக் காட்டி ஆரம்பிக்கும் துவக்கமே ‘இது வேறு மாதிரி படம்’ என்று உணர வைக்கிறது. இந்தியாவின் சிறந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான க்ரிஷ் (சித்தார்த்) , காதல் மனைவி லக்ஷ்மியுடன் (ஆண்ட்ரியா) அத்தனை அழகான, அதே நேரம் அமானுஷ்யமான, ஹிமாச்சல் பிரதேசத்தின் மலை கிராமத்தில் குடியேறுகிறார். தூய திகில் படத்தில் ‘காமெடி’ தான் இருக்கக்கூடாது, காதல் இருக்கலாம் இல்லையா? எக்கச்சக்கமாக இருக்கிறது. காதலும் திகிலும் ஹாலிவுட் தரம். சித்தார்த், ஆண்ட்ரியாவின் காதலும், இமய மலையின் அழகும், நம்மை கிறங்க வைக்கும் நேரம் அவர்களது பக்கத்துக்கு வீட்டிற்குக் குடி வருகிறது பால் (அதுல் குல்கர்னி) குடும்பம். அவரது மகள் ஜென்னி (அனிஷா) , அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே வித்தியாசமாக நடந்துகொள்கிறாள், தற்கொலைக்கு முயல்கிறாள். நாளாக ஆக நிலைமை மோசமாக, உதவிக்கு உளவியல் நிபுணர் பிரசாத் (சுரேஷ்), பாதிரியார், ஆவிகள் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆகியோரது உதவியுடன் காரணத்தைத் தெரிந்துகொண்டார்களா, ஆவியை அனுப்பிவைத்தார்களா என்பது தான் அவள்.

திகிலூட்டும் நிகழ்வுகள், பழிவாங்க/ஆசையைத் தீர்த்துக்கொள்ள வந்த ஆவிகள், மீண்டு சுபம் காணும் முடிவு என பேய்க்கதைகளின் வழக்கமான அமைப்புதான் என்றாலும், ‘அவள்’ தனித்துத் தெரிவது, கதையைத் தாண்டிய விஷயங்களை சேர்க்காமல் நேராய்ப் பயணிக்கும் திரைக்கதை, கிராஃபிக்ஸ், VFX மட்டுமே நம்பாமல் ஒளிப்பதிவு, நுணுக்கமான இசை கலந்து திகில் ஏற்படுத்தியிருக்கும் தொழில்நுட்ப நேர்த்தியில் தான். கதை நடக்கும் இடம் தமிழுக்கு மிகப்புதிது, மிகச் சிறப்பு. பகலில் எத்தனை அழகோ, இரவில் அத்தனை அமானுஷ்யம். இரண்டு, மூன்று காட்சிகள் எப்பேர்பட்டவரையும் உறைய வைக்கின்றன. இடைவேளை வரை மெல்ல மேலேறிச் சென்று உச்சமடையும் திகில் கிராஃப், இடைவேளைக்குப் பின் மெல்ல இறங்குகிறது. ஃபிளாஷ்பேக்கில் காரணம் அறியும் போது, மெல்லிய ஏமாற்றம் ஏற்படுகிறது. திகில் காட்சிகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம், அதற்குக் காரணமாக அமைய வேண்டிய பின்கதை. ஆனால், அது வலுவில்லாமல் இருப்பது குறை. இரண்டு கேள்விகள் பெரிதாக எழுகின்றன, இத்தனை பிரச்சனைகள் நடக்கும் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டிய காரணம் இதுதானா? இந்த சிறிய காரணத்திற்காகவா பேயாக சுற்றுகிறார் அவர்? அதுவும் படம் முடியும்பொழுது போடும் ‘மெசேஜ்’… எத்த்த்த்துக்கு? (ஜம்ப் கட்ஸ் ஸ்டைல்)

சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் என தெரிந்த நடிகர்களின் தேர்ந்த நடிப்பைத் தாண்டித் தெரிவது ஆவி பிடித்த, ஆசை பிடித்த சின்னப்பெண் ஜென்னியாக நடித்திருக்கும் அனிஷா. கிரிஷின் பின்னணி இசை, ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, லாரன்ஸின் படத்தொகுப்பு மூன்றும் திகில் காட்சிகளில் அதிர்ச்சியையும் காதல் காட்சிகளில் அழகையும் சரியாகக் கடத்தியிருக்கின்றன. இமய மலையின் அமைதியில் உறைந்திருக்கும் அமானுஷ்யத்தை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறது கிருஷ்ணாவின் கேமரா. கலப்படமற்ற திகில் படத்தைத் தர விரும்பிய சித்தார்த்-மிலிந்த் ராவ் கூட்டணி, அதில் வென்றிருக்கிறது. ஆனால், அதை முழுமையான அனுபவமாக மாற்றப் பயன்பட்டிருக்கக் கூடிய ஃபிளாஷ்பேக் சற்று வலுவில்லாததால் அதுவே குறையாகியிருக்கிறது. எனினும், முதல் பாதியின் திகில் அனுபவத்திற்காகவே பார்க்கக் கூடிய படத்தைத் தந்திருக்கிறார் மணிரத்தின சீடர் மிலிந்த்ராவ்.

‘அவள்’- மதிப்பிழந்த பேய்களின் மானத்தைக் காப்பாற்றியவள்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer