Friday, November 3, 2017

“எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்கு- கிழக்கிற்கு அனுப்பினால் விளைவுகள் மோசமாகும். வரலாறு மன்னிக்காது“ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் யோசனை என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்களவர்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற சந்தேகம், தமிழ் மக்களிடமும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நான்காவது நாளாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்தல் அல்லது அதனை மறுசீரமைத்தல், தேர்தல் முறை உள்ளிட்ட பல விடயங்கள் இந்த இடைக்கால அறிக்கையில் யோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமாகும்.

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்துவார்களா என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியிலும், அரசியல் உரிமைகைளை மதிக்காது தம்மை இரண்டாவது பிரஜைகளாக நடத்துவதற்கு பெரும்பான்மை செயற்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது. அதேபோல அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்துமா என்ற பாரியதொரு சந்தேகம் சிங்களவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

எனினும், இலங்கை அரசாங்கத்தின் வியூகத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளது. ஒன்றிணைந்த நாட்டை ஏற்றுக் கொண்டதன் ஊடாக இந்த செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் தென்பகுதிக்கு அனுப்பியுள்ளார். தனிநாடு என்ற வியூகத்திலிருந்து, அரசாங்கத்தின் வியூகத்துக்கு வந்திருப்பது தெற்கிற்கு சிறந்ததொரு செய்தியாகும். இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை வடக்கு, கிழக்கிற்கு வெறுங்கையுடன் அனுப்பினால் வரலாறு மன்னிக்காது.

தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா கடைசியாகக் கூறிவிட்டு மறைந்துபோனார். இவ்வாறான நிலையில் முழு இலங்கையையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என சம்பந்தன் கூறும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என சகல கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

இரண்டு பிரதான கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு இணங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கை, சமஷ்டி முறை உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. நாட்டின் ஒரு மூலையிலிருந்து கொண்டு சிங்கள பௌத்த நாடு அவசியம், ஒற்றையாட்சி அவசியம், பௌத்தத்துக்கான முன்னுரிமை நீக்கப்படக்கூடாது எனக் கூற ஒருவருக்கு உரிமை இருக்குமாயின், கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் உரிமை உள்ளது.

நாடு இரண்டாக பிளவுபடும், நாட்டை பிளவுபடுத்த ஆயுதம் ஏந்துவோம் என யாராவது கூறினால் அது அரசியலமைப்புக்கு முரணானது. வடக்கிலோ தெற்கிலோ எவரும் ஆயுதம் ஏந்துவதற்கு இடமளிக்க முடியாது. மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி நாட்டில் தீயிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். அரசியலமைப்பு விடயத்தில் பாடசாலை பிள்ளைகள் போல நடந்துகொள்ள வேண்டாம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer