Saturday, November 18, 2017

போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சகோதரி மகன் வி.என்.பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, அவரது உறவினர் களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

இதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகளும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியுமான ஸ்ரீதளாதேவிக்கும், அவரது கணவர் பாஸ்கரனுக்கும் கீழ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை சென்னை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உறுதி செய்தது.

இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்து 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்தில் 1994ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘லெக்ஸஸ்’ சொகுசு காரை, அதே ஆண்டு சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அப்போது வரி ஏய்ப்பு செய்வதற்காக, அந்த கார் 1993ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்டு 2வது நபருக்கு விற்பனை செய்யப்பட்ட அந்த காரை பழைய கார் என்றும் கூறி இலண்டனில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார்.

இதற்காக போலி ஆவணங்களை தயாரித்து உள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 இலட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டது. இந்த மோசடியை கண்டு பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கில் எம்.நடராஜன், வி.என்.பாஸ்கரன், இலண்டனில் இருந்து காரை அனுப்பிய தொழில் அதிபர் டாக்டர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ் பாலகிருஷ்ணன், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா சுந்தரராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில், பவானி ‘அப்ரூவராக’ மாறி விட்டார்.

டாக்டர் பாலகிருஷ்ணனை அதிகாரிகள் கைது செய்யவில்லை. அவரை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை தனி வழக்காக பிரித்தனர்.

எம்.நடராஜன் உள்ளிட்ட மற்ற 4 பேர் மீதான வழக்கை, உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரித்தது. பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி தனி நீதிமன்றம் வழங்கியது.

அதில், வெளிநாட்டில் இருந்து போலி மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் சொகுசு காரை இறக்குமதி செய்துள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பால கிருஷ்ணன், சுஜரிதா சுந்தர ராஜன் ஆகியோர் மீதான கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.

எனவே, இந்த 4 பேருக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர்கள் ஏககாலத்தில் (2 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். எம்.நடராஜன், வி.என்.பாஸ்கரன், சுஜரிதா சுந்தரராஜன் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரமும், யோகேஷ் பாலகிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer