Tuesday, November 21, 2017

யுனிசெப் (UNICEF) அல்லது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று அழைக்கப்படும் உலகளாவிய அமைப்பு கடந்த 1946 ஆம்  ஆண்டு  ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் ஆரம்பிக்கபட்டது.  இரண்டாம் உலகப்  போரில் பேரிழப்பை சந்தித்த  நாடுகளின் குழந்தைகளுக்கு, உணவு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்  கொடுக்கும் நோக்குடன் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக (Celebrity Advocate)  நடிகை த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கலை, இலக்கியம், நிர்வாக துறைகளில் உள்ள பிரபலங்களை யுனிசெப் அமைப்பு ஆண்டு தோறும் தேர்வு செய்து நட்சத்திர அட்வகேட் அந்தஸ்தை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நடிகை த்ரிஷா அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார். இதற்காக அவர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.மேலும் இந்தப்  பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பார். அண்மையில் கேரள அரசும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் யுனிசெபின் நட்சத்திர தூதராக நியமித்துள்ளனர்.

யுனிசெப்பின் தமிழக - கேரள தலைமை நிர்வாகி ஜாப் ஜக்காரியா பேசும்போது..." வளரும் தலைமுறை இளைஞர்களுக்கு த்ரிஷா ஒரு ரோல் மாடலாகத் திகழ்கிறார். வீடுகளிலும் சமூகத்திலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காவும் குரல் கொடுக்கும் வலிமை அவருக்குள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளுக்காக அவர் குரல் கொடுப்பார்," என்றார்.

நடிகை திரிஷா பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தைத்  திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார்.

யுனிசெப் தரும் இத்தகைய அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பெரும் முதல் தென்னிந்திய நடிகை திரிஷாதான். மேலும் அவரது ரசிகர்களிடமிருந்தும்   சமூக வலைத்தளங்களில் பல தரப்பில் இருந்தும்  வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer