Tuesday, November 21, 2017

குற்றம் நடந்த இடத்தில் விசாரிக்கச் செல்லும் போலீஸ், பயன்படுத்தப்பட்ட கத்தியை எப்படி எடுக்க வேண்டும் என்று கார்த்தி சொல்லும் ஆரம்ப காட்சியே, நம்மை, 'ஆமால்ல...' என்று  ஆச்சரியப்படவைக்கிறது. அதிலிருந்து இறுதிவரை, சில இடங்கள் தவிர,  'தீரன்' வேற மாதிரி போலீஸ். 1995லிருந்து 2005வரை சென்னைக்கு வெளியே நீளும்  நெடுஞ்சாலைகளை ஒட்டிய தனி வீடுகளில், தொடர்ந்து கொள்ளையும், அதற்காக கொலைகளும் நடக்கின்றன. எந்த பெரிய ஆதாரங்களும், துப்புகளும் கிடைக்காத நிலையில், கிடைத்த கைரேகையை வைத்துக்கொண்டு குற்றத்தின் மூலத்தைத் தேடிப் பிடித்து வேட்டையாடுகிறது 'தீரன் திருமாறன்' கார்த்தி தலைமையிலான போலீஸ் டீம். தமிழகத்தில் 2005இல் நடந்த 'ஆப்ரேஷன் பவாரியா' தான் தீரனில் ஆப்ரேஷன் ஹவாரியாவாக மாறி, குடும்பம், காதல், பாடல்கள் சேர்க்கப்பட்டு சினிமா ஆகியிருக்கிறது.

போலீசில் சேருபவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சியிலிருந்து, இறுதிக் காட்சி சண்டையில் ஓநாய் வேட்டை முறை வரை, அத்தனை விவரங்கள், அத்தனை உண்மைகள், அத்தனை உழைப்பு. 'சதுரங்க வேட்டை' வினோத், இரண்டாவது படத்தில் தன் தடத்தை  இன்னும் அழுத்தமாகப் பதித்துள்ளார். போலீஸ் படம் என்பதால், விறைப்பாகவே சுற்றி, வசனங்களைக் கத்தி,  அடித்துப் பறக்க விடும் அதிரடியெல்லாம் காட்டாமல், நிஜத்தில் காவல்துறையினுள் நடக்கும் அரசியல், இருக்கும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்கள், செய்யும் கோல்மால்கள் என அனைத்தையும் காட்டியிருப்பது தீரனின் நம்பகத்தன்மையை பெரிதாக்கியிருக்கிறது. கொள்ளையடிக்கும் கும்பலின் பின்னணியை இத்தனை விவரமாக எந்தப் படத்திலும் காட்டியதில்லை. அதற்கும், சமமான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அத்தனை தகவல்களையும் வெறும் வசனங்களாகவோ, பின்கதையாகவோ சொல்லி அலுப்பேற்படுத்தாமல் அதற்கு பயன்படுத்தியிருக்கும் யுக்தியும் சிறப்பு. சதுரங்கவேட்டை வசனங்கள், மீம்சிலிருந்து அன்றாட வாழ்க்கை வரை  ட்ரெண்டானவை. அதற்காக, அதே போன்று இருக்கவேண்டுமென்ற அழுத்தமெல்லாம் எடுத்துக்கொள்ளாமல், இயல்பான வசனங்களை  ஆங்காங்கே தேவையான ஆழத்தோடு எழுதியிருக்கிறார்.  'உங்களை மாதிரி அதிகாரியை கொல்லுவான், அப்போ பாத்துக்கலாம்', 'அறிவு எனக்குப் பிடிக்காது, குற்றங்களை செய்ய வைக்கும்', போன்ற வசனங்கள் உதாரணம். இதில், கூடுதலாக, கார்த்தி-ரகுல் இடையிலான 'மாமா-பாப்பா'  காதல் வசனங்களும் நம்மை லவ் ஸ்மைலி போட வைக்கின்றன.

இத்தனை விஷயங்களுடன் பயணிக்கும் திரைக்கதையில் முதல் அரை மணி நேர காதலும், இரண்டாம் பாதியில் வரும் 'கனா...கனா..கங்கனா' பாடலும் எக்ஸ்ட்ரா சுமை தான். வில்லன் கூட்டம் சுற்றி அமர்ந்து பார்க்க  அழகி ஆடும் பாடல், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்டதே வினோத் ப்ரோ?  தீரன் திருமாறனாக, கார்த்தி பக்குவமாக நடித்து, வெயிலிலும், இருளிலும் ஓடி ஓடி உழைத்திருக்கிறார். அவரோடு வரும் போலீஸ் டீம், போஸ் வெங்கட், வட இந்திய காவலர்கள் என அத்தனை பேரும் படத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை நடிப்பால் உறுதி செய்துள்ளனர். வில்லன் 'ஓமா'வாக வரும் அபிமன்யூ சிங், ஓநாய் வேட்டையாடும் குரூரத்தை முகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் இருக்கும் இன்னொரு வில்லனும் நம்மை முடிந்த அளவு வெறுப்பேற்றியுள்ளார். இவ்வளவும் சேர்ந்து, கொள்ளை சம்பவக் காட்சிகளில் நம்மை உண்மையில் அதிர வைக்கின்றன. ரகுல், படத்தின் மென்பாதிக்குப் பொறுப்பு. அழகான ரகுல், அழகான பாடல்கள் என்றாலும் சற்று தொய்வுதான் அந்த காதல் காட்சிகள்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, நள்ளிரவு கொள்ளை காட்சிகளில் திகிலையும், வடஇந்தியாவின் வெம்மையையும் மிக நேர்த்தியாக நமக்குக் கடத்தியிருக்கிறது. ஜிப்ரான் சாதாரண இசையமைப்பாளரும் அல்ல, அதற்காக பிரம்மாண்டங்களை கருவிகளில் காட்டும் 'அசாதாரணமான'வரும் அல்ல. 'மகளிர் மட்டும்',  'அறம்', இப்பொழுது 'தீரன்' என அவரது வரிசை அழகாகவும் வெரைட்டியாகவும் வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய ஆக்ஷன் படத்திலும் நான்கு அழகான  காதல் பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டிருக்கிறார். இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் வரும் பின்னணி இசை, நம்மை உண்மையில் அதிர வைத்து அழுத்தத்துக்குள்ளாக்குகிறது. அத்தனை அதிரடி. இத்தனை விவரங்கள், பல்வேறு நிலவமைப்புகள், CG, இரவு பகல் என மாறும் காட்சிகளை பரபரப்பாக தொகுத்திருக்கிறார் சிவநந்தீஸ்வரன். உண்மைக்கு நெருக்கமாகவே செல்வதால், சற்றே நீளும் இரண்டாம் பாதியையும் அந்த பாடலையும், பழங்குடிகள், போர்வை சமுக்காளம் விற்க வரும் வடஇந்தியர்கள் குறித்து ஏற்படும் பயம், ஆகியவற்றைத் தவிர்த்து அனைத்தும் நன்று.   

கதைக்காக, திரைக்கதைக்காக இத்தனை பேரை சந்தித்து, இத்தகைய உழைப்பை அளித்து உருவாக்கப்படும் படம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் வசனங்களை வைத்து எடுக்கப்படும்  பிற படங்களை விட எவ்வளவு உயர்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று மெர்சலாக காட்டியிருக்கிறது தீரன் - அதிகாரம் ஒன்று. இதற்கு ஒரு போலீஸ் சல்யூட்!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer