Thursday, November 9, 2017

பாலிவுட்டைபோல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் தமிழிலும் பெருகி வெற்றியும் பெற்று வருகின்றன. இம்மாதிரியான பெண்களை மையப்படுத்திய கதையம்சமுள்ள படங்கள்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுவருகிறது. மகளிர்மட்டும்,அம்மன்,அருந்ததி,அம்மா கணக்கு,மாயா,டோரா போன்ற படங்கள் வரிசையில் KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. படத்தை பற்றி இயக்குனர் கோபி நயினார் பேசியதாவது....

இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதன் மூலம் தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது தான் உண்மை.இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.கதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார்.

இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார்.எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார் இயக்குனர் கோபி நயினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer