Sunday, November 19, 2017

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே யுத்தத்தைக் கற்றுக்கொண்டோம். அவர் இல்லாவிட்டால், நான் பீல்ட் மார்ஷலாக உருவாகியிருக்க மாட்டேன்.” என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“யுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்கவேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் எந்தப் பகுதியிலும் இராணுவம் இருக்க வேண்டும்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவத்தினர் குற்றமிழைக்கவில்லை எனக் கூறுபவர் இராணுவத் தளபதியாகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர். முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருந்தால் நெருக்கடியில் இருந்து எம்மால் ஒருபோதும் மீண்டெழ முடியாது" என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யுத்தம் ஆரம்பமாகும்போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். ஆனால், தற்போது போன்று அன்று பலமான இராணுவம் இருந்திருந்தால் இரண்டு வருடங்களில் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருப்போம். யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும். இராணுவத்தைப் பலவீனப்படுத்தினால் அது நாட்டுக்கு ஆபத்தாகவே அமையும்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எமக்கு செல்ல முடியாதுள்ளது. ஆனால், அமெரிக்க இராணுவத் தளபதி இலங்கைக்கு வருகின்றார். இதனை இப்படியே விட்டுவிட முடியாது. இராணுவம் தப்புச் செய்யவில்லை என்று கூறுபவர் இராணுவத் தளபதியாக இருப்பதற்குத் தகுதியற்றவராவார். இராணுவத் தளபதி குற்றம் செய்திருந்தாலும் அது பற்றி விசாரிக்கப்படவேண்டும். அதனை விடுத்து முட்டாள்தனமாகப் பேசி கொண்டிருப்பதால் எம்மால் நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது" என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer