Wednesday, November 15, 2017

கோவையில் தமிழக ஆளுநர் நேற்று மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன் இணையதளத்திற்கு இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன்,

கவர்னருடைய ஆய்வு என்பதே தவறு. ஆய்வு என்றால் ஒரு திட்டத்தை வைத்து, அதில் என்ன நடந்திருக்கிறது, நடக்கவில்லை என்பதுதான் ஆய்வு. கவர்னர் அதிகாரிகளை சந்தித்தார் என்பதுதான் முக்கியம். ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜக கவனர்கள் மேல் ஏதாவது ஒரு வகையில் குற்றச்சாட்டை வைக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.

கவர்னர் பதவி அலங்கார பொருள், எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று ஒருபுறம் சொல்கிறார்கள். நேற்று கவர்னர் கோவை வந்திருந்தார். நாங்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அதிகாரிகள், எங்களை மட்டும் கவர்னர் சந்திக்கவில்லை, சிறுதொழில் அமைப்பை சார்ந்தவர்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், தலித் மக்களிடம் பணியாற்றக்கூடிய சமூக நல அமைப்புகள், இதுபோன்று சமூகத்தில் பல்வேறு தரப்பு மக்களை அவர் சந்தித்துள்ளார்.

ஒரு கவர்னர் விழாவுக்கு வருவதும், சிறப்புரை ஆற்றுவதும், தலைமை தாங்குவதும் மட்டுமே அல்லாமல், தூய்மை பாரதம் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டு குப்பைகளை அள்ளுவது மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அதனுடைய முக்கியத்துவம் மக்களுக்கு உணர வைக்கப்படுகிறது. கவர்னர்கள் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களை முன்னின்று எடுத்து செயல்பட்டால் அந்த திட்டம் விரைவாக நிறைவேறுவது மட்டுமல்லாம் வெற்றிகரமாகவும் அமையும்.

கவர்னரின் வேலை ஊழல் புகாரை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதனை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஊழல் புகார்களை விசாரிப்பவராக கவர்னரை பார்க்காமல், அரசாங்கத்தோடும், மக்களோடும் இணக்கமாக இருப்பவராகவும், மக்கள் அதிகமாக பங்களிக்கக் கூடிய திட்டங்களில் முன்னிப்பவராக மாறக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். கவர்னர் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டதும், நேற்று அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரை பார்த்ததையும் வரவேற்கத்தக்க விசயமாக பார்க்க வேண்டும்.

அதிகாரிகளிடம் ஏதாவது தெரிந்துகொள்ள அவர்களை கவர்னர் சந்தித்திருக்கலாம். அல்லது நடைமுறையில் இருக்கக் கூடிய திட்டங்களில் செயலாக்கக்கூடிய சிக்கல்களை, தடைகளை கேட்டிருக்கலாம். ஆனால் நாமாக கற்பனை செய்துகொண்டு இதில் பேசுவது அவசியமில்லாதது.

இதில் உள்ளுர் மந்திரியை கூப்பிடவில்லை என்று சொல்கிறார்கள். அந்த மந்திரியே கவர்னர் அதிகாரிகள் சந்திப்பு ஆரோக்கியமான விசயம் என்கிறார். நாங்கள் அந்த மந்திரியை பாராட்டுகிறோம். எல்லா இடத்திலும் உள்ளுர் மந்திரியை கேட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மத்திய அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், மத்திய அரசின் அமைப்புகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் ஆலோசனை செய்யலாம். இதற்கு முன்னால் தமிழக கவர்னர்களாக இருப்பவர்கள் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்கள்.

திருப்பூரில் கலந்து கொள்ளும் தூய்மை இந்தியா திட்டத்தில் மக்களின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்று ஆளுநர் கேட்டிருக்கலாம். கவர்னர் மேல் அரசியல் கட்சியினர் எப்போதும் குற்றச்சாட்டு வைப்பார்கள். வழக்கம்போல ராஜ்பவனில் 3 வேளையும் சாப்பிட்டுவிட்டு, வர பைல்களில் கையெழுத்து போடாமல், சுறுசுறுப்பாக மக்களை சந்திக்க போகிறார்களே என அரசியல் கட்சியினருக்கு பயம் இருக்கலாம். அந்த பயத்தில் பேசலாம். கவர்னர் அலங்கார பொருளாக இல்லாமல், மக்களோடு சென்று குப்பை பொறுக்குகிறார், மக்கள் நல திட்டங்களை முன் எடுத்து செல்ல முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.

தமிழத்தில் ஆளும் கட்சி இதனை விமர்சிக்கவே பயப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே

அதற்கு பாஜக பதில் சொல்ல முடியாது.

ரெய்டு வரும் என்பதால் ஆளும் கட்சியினர் எதுவும் விமர்சிக்காமலேயே இருக்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறே

ரெய்டு வந்தால் வரட்டும், உண்மையாக இருப்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள் ஏன் ரெய்டை கண்டு பயப்பட வேண்டும்.

தமிழக வரலாற்றில் இதுபோன்று எந்த கவர்னரும் செயல்படவில்லை என்றுதானே கேட்கிறார்கள்

இதுவரை இருந்த பிரதமர்கள் கொண்டுவராத திட்டங்களை தற்போதுள்ள பிரதமர் மோடி கொண்டு வந்தால் அதனை ஏற்காமல், வேண்டாம் என்று ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் சொல்வீர்களா. புதிதாக ஒரு விசயம் வந்தால் அதனை ஏற்க வேண்டிய மனப்பக்குத்தில் இருக்க வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer