Wednesday, November 15, 2017

தாத்தா கலைஞர் 2.0 வாக மீண்டும் வந்து தொண்டர்களுக்குக் கைகாட்டுகிறார்… தந்தை ஸ்டாலின் உடற்பயிற்சி வீடியோ வருகிறது… உதயநிதி ஸ்டாலின் என்ன செய்கிறார்? சினிமாவின் நிலை, டிக்கெட் விலை, ‘மெர்சல்’ பிரச்சனை அனைத்தையும் குறித்த நம் கேள்விகளுடன் தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தோம்.

தமிழ் சினிமாவில் ஜி.எஸ்.டி., டிக்கெட் விலை உயர்வு, தயாரிப்பாளர் சங்க பிரச்சனைகளை, ஒரு தயாரிப்பாளரா எப்படி ஹேண்டில் பண்ணனுமுன்னு நினைக்கிறீங்க?

ஒரு வருஷத்துக்கு கிட்டத் தட்ட முன்னூறு படம் வருது. வாரத்துக்கு 4, 5 படம் வருது. இதை கொஞ்சம் ரெகுலேட் பண்ணனும். நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சினிமாவின் நிலையை உணர்ந்து சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நல்ல படங்களை, குறைந்த செலவில் எடுத்தால்தான் சினிமா ஜெயிக்க முடியும். எல்லோரும் சேர்ந்து இதைச் செய்தால் தான் சினிமாவைக் காப்பாத்த முடியும்.

‘நேரம்’, ‘மைனா’ போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கு, அவற்றை ரிலீஸ் பண்ணிய நீங்களும் காரணம். இப்போ, திரும்பவும் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக கஷ்டப் படுகிற நேரம். தயாரிப்பாளராக நீங்கள் என்ன செய்யப்போறீங்க?

நான் பண்ணும் படங்களே வரிசையா வந்துக்கொண்டிருப்பதால், அதை ப்ரமோட் பண்ணுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நிறைய புதிய இயக்குநர்கள் வருகிறார்கள். புதிய திறமைசாலிகள் வருகிறார்கள். ஷார்ட் பிலிம் எடுப்பவர்கள் டைரக்டராகிவிடுகிறார்கள். நல்ல நல்ல படங்கள் வரணும். பைரஸியையும் கொஞ்சம் அரசு சப்போர்ட்டோட கண்ட்ரோல் பண்ணணும். ஜி.எஸ்.டி. விஷயம் வேற இருக்கு. நிறைய விஷயம் சினிமாவுக்கு நெகட்டிவ்வாகத்தான் போய்க்கிட்டு இருக்கு. ஜி.எஸ்.டி. வந்ததால் டிக்கெட் விலையும் ஏறிடுச்சு. ப்ரொடக்சன் காஸ்ட்டும் 18 – 20 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆக இதையெல்லாம் கம்மி பண்ணணும் என்றால், ஆர்ட்டிஸ்ட், டெக்னீசியன்ஸ் எல்லாருமே தங்களது சம்பளத்தில் இருந்து கொஞ்சம் இறங்கி வரணும். நல்ல படங்கள் வந்தாதான், ஆடியன்ஸ் பார்க்க வருவாங்க. எல்லாருமே இதை செய்தால் தமிழ் சினிமா நல்ல நிலையை நோக்கிபோகும்.

”மெர்சல்’ படம் ஹிட்டாகுறதுக்கு உதவுனாங்க’ என்று நீங்க, எச்.ராஜா, தமிழிசை சவுந்தராஜனைப் பற்றி கமெண்ட் பண்ணது ஃப்ளாஷ் நியூசா ஓடுச்சே?

‘இப்படை வெல்லும்’ படவேலைகள் முடிஞ்சதும் , தமிழிசை, எச்.ராஜாவுக்கு இந்தப் படத்தை காட்டலாமா என டைரக்டர் கேட்டார். நான் ஏன்னு கேட்டேன். அவர்கள் ஏதாவது சொல்வாங்க, படம் பப்ளிசிட்டி ஆகும் என்றார். ‘அதெல்லாம் தேவையில்லைங்க, நம்ம படம் ஓடுங்க’ என்று இதைத்தான் நான் சொன்னேன். அதுக்குள்ள நான் ஏதோ சொல்லிவிட்டது போல ஃப்ளாஷ் நீயூஸ்செல்லாம் வந்திருச்சு . சரி விடுங்க. என் வாயை கிளராதீங்க. (சிரிக்கிறார்)

விஜய் இப்போ ‘தளபதி’ ஆகிட்டாரே?

அவர் இன்னும் சினிமாவில் தான் இருக்கிறார். எல்லாத்தையும் தாண்டி எங்களுக்குள்ள நட்பு இருக்கு. ‘எம்புட்டு இருக்குது ஆசை’ பாட்டைப் பாத்துட்டு, ‘ரொம்ப நல்லா ஆடியிருக்கீங்க…எப்போ டிவில போட்டாலும் பாத்துருவேன்’னு சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணினார். இப்படித்தான் நாங்க இருக்கோம்.

அரசியல் சார்ந்த பெரும் பின்னணியில் இருந்து வந்துட்டு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாத்துலயும் பெருசா தலையிடாம இருக்கீங்களே?

இல்லை.. எனக்கு எப்பப்ப என்ன சொல்லனுமுன்னு தோணுதோ அதை நேராகச் சொல்லுவேன். என் ட்விட்டர்ல வெளிப்படுத்துவேன். அப்பா அவுங்க ட்விட்டர் அக்கவுண்ட்ல பொதுவா ஏதாவது போட்டியிருந்தாங்கன்னா, அது எனக்கு சரின்னு தோனுச்சின்னா அதை ரிட்வீட் பண்ணுறேன், இப்போதைக்கு அவ்வளவுதான்.

அப்படி அரசியல் சாயம் இல்லாமல் சினிமாவில் இருக்க முடியுதா?

ஆரம்பத்திலிருந்தே அரசியல் சாயம் பூசப்பட்டுத்தான், 6 வருசமாக என்னுடைய படங்கள் மட்டுமே வரி விதிக்கப்பட்டு இருக்கு. 30 சதவீதம் நான் மட்டுமே கட்டிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு படத்திற்கும் நான் கோர்ட்டுக்குப் போய் வெற்றி பெற்றிருக்கேன். இன்னும் சில வழக்குகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. நான் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அது என் மேல் பூசப்படுகிறது. அது ஒன்றும் பண்ண முடியாது.

‘மனிதன்’ உங்களுக்கு வேற ஒரு இமேஜ் கொடுத்த படம். ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து காமெடி படங்களா வருதே?

‘மனிதன்’ எனக்கு அமைஞ்சது ரொம்ப நல்ல விஷயம். அஹமதுக்கு நான் நன்றி சொல்லணும். இப்போ திரும்ப அதோட இரண்டாம் பாகம் பண்ணலாம்னு நெனைச்சு பேசுனோம். ஜாலி LLB-2 ரீமேக் பண்ணலாம்னா, அந்தக் கதை தமிழுக்கு ஒத்து வராது. அதுனால தள்ளி தள்ளி போகுது. கண்டிப்பா சீக்கிரம் சேர்ந்து நல்ல படம் பண்ணுவோம். இப்போ, பிரியதர்ஷன் சார் கூட ‘நிமிர்’ படம் ரொம்ப நல்லா வந்துக்கிட்டிருக்கு. என்னை பிரியன் சார் கூப்பிட்டதே நம்ப முடியல. அவர் என் படம் ஒன்னு கூட பாத்தது இல்லையாம். அதனால தான் கூப்பிட்டிருப்பார்னு நெனைக்கிறேன்.

சமீபத்தில் ஸ்டாலின் ஒர்க் அவுட் பண்ற வீடியோ வெளியானது. நீங்க ஒர்க் அவுட் பண்றீங்களா?

அந்த வீடியோ பாத்துதான் ஜிம் போகணுமுன்னு ஆசை வந்திருக்கு. நாம பண்ண வேண்டியதெல்லாம் அவர் பண்றாரேன்னு. ஆனா அவர் காலையிலேயே போயிடுறாரு, எனக்கு டைம் கிடைக்கும்போதுதான் போகிறேன். ஆனா அவுங்க ரெகுலரா போறாங்க.

0 comments :

Post a Comment

 
Toggle Footer