Saturday, November 11, 2017

பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் நவம்பர் 8ல் கறுப்பு தினம் கடைபிடிக்க காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் முடிவு எடுத்தது. தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக நடத்தின. பரபரப்பான பயணமாக சென்னை வந்த மோடி, அந்த பரபரப்பிலும் கோபாலபுரம் சென்று, கலைஞரை சந்தித்தார். இவையெல்லாம் இணைத்து  திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறது என செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,

தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதா? இதையும் கூட்டணி போட்டுத்தான் நடத்த வேண்டுமா? மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக நடத்தியுள்ளன. இதை  திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறது என நான் பார்க்கவில்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டக் கூடிய இடத்தில் இரு கட்சிகளும் உள்ளன.

கலைஞரை மோடி சந்தித்தப் பின்னர்தான் திமுக, காங்கிரஸ் தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே?

8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இரு கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எந்த இடத்திலேயும் அறிவிக்கப்படவில்லை. மோடி வருகைக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோதெல்லாம் மோடி வந்து பார்க்கவில்லை. திடீரென்று வந்து பார்க்கிறார் என்றால், திமுக எடுக்கும் பாஜக எதிர்ப்பு நடவடிக்கை வேகத்தை குறைக்க முயற்சி செய்கிறார். இன்னொன்று காங்கிரஸ் கட்சியுடன் உள்ள நெருக்கத்தை முறிக்க முயலுகிறார். மோடியின் இந்த சந்திப்பு உள்நோக்கம் உடையதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவையெல்லாம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.

செஸ் போர்டில் அதிமுக காய்களை எல்லாம் நகர்த்தி, நகர்த்தி அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வரை தலையாட்டி பொம்மைகளாக மாற்றியதுபோல, திமுக பக்கம் தற்போது மோடி திரும்பியுள்ளார். திமுக ஒருபோதும் அதுபோன்று நடந்து கொள்ளாது. காங்கிரஸ் - திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியாகவும், எதிர்க்கட்சி என்ற முறையில் செயல்பாட்டு ரீதியாகவும் ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் அது நிர்மாணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer