Tuesday, November 28, 2017

2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் முடிக்குரிய இளவரசரால் தீவிரவாதத் தடுப்பு கூட்டணி அமைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டணியின் முதல் மாநாடு ரியாத் இல் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

40 முஸ்லிம் தேசங்கள் பங்குபற்றிய இந்த மாநாட்டில் எமது கூட்டு முயற்சியால் தீவிரவாதிகள் இந்தப் பூமியில் இருந்து முற்றாக அழிக்கப் படும் வரை அவர்களுக்கு எதிரான போர் தொடரும் என சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியின் பாதுகாப்புத் துறை அமைச்சருமான பில் சல்மான் தனது உரையில் தீவிரவாதிகளால் இம்மாநாட்டில் பங்கு பற்றியுள்ள அனைத்து நாடுகளுமே ஏதோவொரு விதத்தில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இதனை எதிர்கொள்ள ஒரு முழுமையான கூட்டமைப்பு எமக்கு மத்தியில் இருக்கவில்லை என்றும் எனினும் அது இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது என்றும் தெரிவித்தார்.

சுமார் 41 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பால் உருவாக்கப் பட்ட இந்த தீவிரவாதத் தடுப்பு கூட்டணி Pan-Islamic unified front என்றும் அழைக்கப் படுகின்றது. பெரும்பாலான சுன்னி இஸ்லாம் நாடுகளால் ஆன இந்த அமைப்பு இஸ்லாமிய மதத்தின் இறுதித் தூதரான முஹமது நபி அவர்களின் கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையால் ஆன ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஈராக், சிரியா போன்ற நாடுகள் இக்கூட்டமைப்பில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் 6 முக்கிய இஸ்லாமிய தேசங்களால் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்டு இராஜதந்திர உறவும் முறிக்கப் பட்ட நாடான கத்தார் இந்தக் கூட்டமைப்பில் இணைக்கப் பட்ட போதும் நேற்றைய மாநாட்டில் எந்தவொரு கத்தார் அதிகாரிகளும பங்குபற்றவில்லை. ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஜெனரல் ரஹீல் ஷரீஃப் இக்கூட்டமைப்புக்குப் பிரதான கட்டளைத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer