Monday, November 27, 2017

இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைந்துள்ள அகுங் என்ற எரிமலை சீற்றமடைந்து கரும் சாம்பல் புகையினை 4000 மீட்டர் உயரம் வரை கக்கி வருவதால் அப்பிரதேசத்தில் விமான சேவைகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவு ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் என்பதால் சாம்பல் விழுந்து வரும் பகுதிகளில் முகமூடிகள் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.

பாலியின் கிழக்கே லோம்போக் தீவிலுள்ள சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாம்பல் மழை பெய்ததாகவும் பேரிடர் மட்டுப் படுத்தல் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அகுங் மலைப் பகுதியை சுற்றி 7.5 Km வரை தொலைவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தற்போது இங்குள்ள தற்காலிக தங்குமிடத்தில் 25 000 மக்கள் மாத்திரமே தங்கியுள்ள நிலையில் எரிமலை நடவடிக்கை காரணமாக பெரிய வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இறுதியாக 1963 இல் அகுங் எரிமலை சீற்றமடைந்த போது 1000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவிலுள்ள தீவுகளில் 130 இயங்கு நிலை உயிர் எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் அண்மைக் காலமாக எரிமலை வெடிப்பு அபாயம் காரணமாக இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறைக்குக் கிடைக்க வேண்டிய பொருளாதாரத்தில் 110 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer