Monday, November 27, 2017

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்து அதிலிருந்து கேள்வி எழுப்பிய யாரும் தமிழ்த் தரப்பில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு தேவை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியேற்ற தினமே கூறினார். அந்த அடிப்படையில் இருந்துதான் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பணி ஆரம்பமானது. அத்தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. அதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் இரு மாதங்களின் பின்னர் நான்கு முறை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏகமனதாக அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பிலே பன்னிரெண்டு விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அதில் ஆறு விடயங்கள் உள்ளடக்கியதான உபகுழு அறிக்கைகள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. மிகுதியான விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையிலே இருக்கின்றன என்பது அறிமுகத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.

ஆனாலும், இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்த ஒரு மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளர்கள் சிலர் கூடி ஆராய்ந்துள்ளனர்.

ஆராய்ந்ததன் பின்னர், அவர்கள் எழுப்பிய கோசம், சட்டம் ஒழுங்குகள் இதில் இல்லையே என்பதாகும். பேராசிரியர்கள் நிபுணர்கள் குழாமே இப்படி அறிக்கை விட்டது. ஆனால் சட்டம் ஒழுங்குகள் பற்றி ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியான அரசியலமைப்பு சபை முதலாவது அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால அறிக்கை அறிமுகத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது அறிக்கையினை வாசித்திருந்தால் அது புரிந்திருக்கும். அவ்வாறு வாசிக்காத நிலையில் இடைக்கால அறிக்கையின் அறிமுகத்தை வாசித்திருந்தால் அது புரிந்திருக்கும். அறிக்கையினுடைய அறிமுகத்தை கூடப் படிக்காமல் இன்று எழுப்புகின்ற கோசங்கள் ஏராளம்.

இடைக்கால அறிக்கையில் ஒன்றுமில்லை என்பதை எப்படி மக்களுக்கு புரிய வைப்பது என்பது தொடர்பில் நேற்றைய முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இருவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றையும் படிக்காவிட்டால் ஒன்றுமில்லாமல்தான் இருக்கும். ஆனால் படித்து பார்த்தால் அதில் உள்ள அடிப்படையான விடயங்கள் தெரிந்திருக்கும்.

ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கும் போது, நடுவே இதுவரையில் நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவதே இந்த இடைக்கால அறிக்கை. இது ஒரு முழுமையான அறிக்கை அல்ல. முழுமையான அறிக்கைகள் உள்ளன. அதனை படித்துப்பார்க்கலாம். ஆனாலும் உபகுழுக்களை கொண்டு பொதுச்சேவை, பொதுநிதி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை மனித உரிமை உள்ளிட்ட ஆறு விடயங்களை உள்வாங்கியதான இந்த முழுமையான அறிக்கையை இதுவரைக்கும் முழுமையாக படித்து பார்த்து கேள்வி கேட்ட தமிழ்த் தரப்பு யாருமில்லை.

எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள், மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் எனும் கரிசனையோடு கோசமிடுகின்றவர்களில், ஒருவராவது அறிக்கையில் உள்ள ஆறு விடயங்களில் ஒரு விடயத்தை பற்றியாவது மக்களுக்கு சொல்லவில்லை. முக்கியமான சட்டம் ஒழங்குகள் இந்த அறிக்கையிலே உள்ளது கூட தெரியாமல், இடைக்கால அறிக்கையை விமர்சிப்பவர்கள் இங்கு உள்ளனர்.

ஒற்றை ஆட்சி என்பது பிரித்தானி பாராளுமன்றத்தில் இருந்து வருகின்ற ஒரு கோட்பாடு. பிரித்தானியாவிலே எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம் இல்லை. ஆனால், அந்த கோட்பாடு உருவாவது பிரித்தானியாவிலே. சட்டவாக்கும் அதிகாரத்தை பற்றியதுதான் இந்த ஒற்றை ஆட்சி. அது நிறைவேற்று அதிகாரத்தை பற்றியோ நீதிமன்ற அதிகாரத்தை பற்றியதோ அல்ல. அது சட்டவாக்கம் அதிகாரத்தை பற்றியது. பிரித்தானியாவிலே பாராளுமன்றத்திற்கு நிகரான இன்னொரு சபை இருக்க முடியாது.

அனைத்தும் பாராளுமன்றத்தினுடைய மீயுயர் தன்மை. அந்த கோட்பாடு எங்களது நாட்டில் தற்போது இல்லை. ஆனால் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பு சட்டத்திலே அது இருந்தது.

பௌத்த சபா பீடர்களே உங்களது அமைப்பை பாருங்கள் நீங்கள் சமஸ்டி முறையைதான் கொண்டிருக்கின்றீர்கள் என, மகாநாயக்க தேரர்களை பார்த்து முற்போக்குவாதியான தம்பர அமில எனும் பௌத்த குரு ஒருவர் அண்மையிலே கூறினார்.

அண்மையில் மாத்தறை நகரில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் பொதுக்கூட்டமொன்றில் நான் கலந்து கொண்டேன். அங்கு உரையாற்றுகையிலே அந்த பௌத்த குரு அவ்வாறு கூறினார்.

அஸ்கிரிய, மல்வத்த, இராமாண்ய, சியாம்நிக்காயா என ஒவ்வொரு பகுதி வைத்திருக்கின்றீர்கள். ஒவ்வொரு இடத்திலும் அருண்நாயக்க எனும் பகுதியும் வைத்திருக்கின்றீர்கள். மாத்தறையில் இருக்கின்றவருக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் கண்டிக்கு செல்ல தேவையில்லை என பௌத்த சமய கட்டமைப்பே தெட்டத்தெளிவாக சமஸ்டி கட்டமைப்பை பேணுகின்ற போது, நாட்டிற்கு சமஸ்டி வேண்டாம் என ஏன் சொல்லுகின்றீர்கள் என அவர் மாத்தறையில் இருந்து கேட்கின்றேன் என கேள்வி எழுப்பினார். அதேவேளை பௌத்த சமய கட்டமைப்பு சமஸ்டியாக உள்ளது. ஆனால் சமஸ்டி என எழுதப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்த நாட்டிலே மீண்டும் இரத்தகளரி ஏற்படக்கூடாது என்பதற்காக நாட்டிற்கு சமஸ்டி முக்கியம் எனவும் அதிகாரம் பகிரப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், அது விரைவில் ஏற்பட்டுவிடாது எனவும் காலப்போக்கில் அது உருவாகும் என்றும் உரையாற்றியதாக கூறினார்.

இன்றைக்கு இந்த நல்லாட்சியை கொண்டு வந்த சிவில் அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவேண்டும் எனும் பிரச்சாரத்தை சிங்கள பகுதிகளிலே மேற்கொள்ளுகின்றனர்.

ஆனால் இவ்வாறான செய்தி தமிழ் பத்திரிகைகளில் வருவதில்லை. இவ்வாறான விடயங்கள் எங்களது மக்களுக்கும் தெரியவேண்டும். புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்றே சொல்லப்படுகின்ற செய்திகளே பத்திரிகைளில் வருகின்றது. மகாநாயக்க தேரர்கள் தினேஸ் குணவர்த்தனவை போன்றவர்களை மேடையில் வைத்துக் கொண்டு புதிய அரசியலமைப்பு வேண்டாம் என ஏன் சொல்கின்றீர்கள் என கேட்பதெல்லாம் தமிழ் பத்திரிகைகளில் வருவதில்லை. ஆனால் அங்கிருக்கும் சிறிய அமைப்பு ஒன்று புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்று சொன்னால் எல்லாப்பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக வந்து விடும்.

அது எதற்காக என்றால், எதிர்மறையான கருத்துக்கள் வந்தால் நாம் பயந்து விடுவோம் என்பதற்காக, எமக்கு தேவையான அரசியலமைப்பு சட்டத்தை நாம் உருவாக்காமல் விட முடியாது. அதற்குரிய முக்கிய பின் புலங்கள் யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்குரிய சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக கடந்த ஆட்சியை இல்லாதொழித்து எதிரும் புதிருமாக இருந்த கட்சியை ஒன்றினைத்து நல்லாட்சியை நடத்துவதற்கு எதிர்கட்சியான நாங்கள் பலமான காரணியாக இருந்திருக்கின்றோம். அதற்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளை பெறவில்லை.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer