மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை, தஞ்சை, மன்னார் குடி, நாமக்கல், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் 187 இடங்களில் 1,600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 நாட்களுக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
முன்பு ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் சென்னை அடையார் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை வருமான வரி அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு 9.55 மணிக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அவர்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அலுவல் சார்ந்த அறைக்கு சென்று சோதனை போட்டனர். ஏற்கனவே பூங்குன்றன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நேற்று அவரை வருமான வரித்துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாக அழைத்து சுமார் 3 மணி நேரம் துருவித்துருவி விசாரித்தனர். அந்த விசாரணையை தொடர்ந்து, ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அறையில் சோதனை நடத்தப்பட்டது.
ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்படுவது பற்றிய தகவல் அறிந்ததும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக் அங்கு விரைந்து வந்தார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி சோதனையை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Saturday, November 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment