Thursday, November 23, 2017

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி என்ற அடையாளத்துக்குள் ஒடுங்குபவர் அல்ல பிரதிபா. முகநூலில் மிகத் தீவிரமாக சமூக, அரசியல் பிரச்சினைகளில் இயங்கியவர். முகநூலில் மட்டுமல்லாமல் பல இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியவர்.

கடாபியின் வரலாற்றைத் தொகுத்து ஒரு நூல், நடப்பு நிகழ்வுகளையும் தன் அனுபவங்களையும் கோர்த்து ஒரு பெண்ணின் பார்வையில் எழுதிய 'நிழலாய்த் தொடரும் நிஜங்கள்' என்ற நூல், அழகு என்பது மனதின் உண்மையில், வலிமையில் உள்ளது என்ற கருத்தை மய்யப்படுத்தி அவர் எழுதிய அழகுக் குறிப்புகள் குறித்த ஒரு நூல், இன்னும் சில கட்டுரைத் தொகுப்புகள், பிற பதிப்பகப் பணிகள் என தொடர்ந்து இயங்கி வந்தவர்.

திருநங்கையர் நலனுக்காகச் செயல்படும் 'பார்ன் டு வின்' என்ற அமைப்பின் கௌரவப் பொறுப்பில் இருந்தபடி, திருநங்கையருக்கான பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவர். திருநங்கையர் குறித்த அவர் எழுதிய நூல் இப்போது அச்சில் இருக்கிறது.

கடும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்குவதன் மூலம் அவ் வலிகளுக்கு மாற்றுக் கண்ட மன உறுதியாளர்.

சமகால நிகழ்வுகள் குறித்த அறிவார்ந்த கருத்துகளை விவாதிக்கும், கருத்தரங்குகள் நடத்தும் சமூக ஊடக செயற்பாட்டாளர் குழுவான Smagன் தீவிர செயல்பாட்டாளர். அதன் செயற்குழு உறுப்பினரும்கூட.

இணையதள திமுகவினருக்காக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று மாநில அளவில் பரிசு பெற்றார். தி.மு.க. தலைவர் கலைஞர் இல்லத்தில் அவரது கரத்தில் பரிசு பெற்று ஒரு சந்திப்பு. திருவாரூர் மருமகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், பாசத்தில் நீண்டநேரம் கையைக் குலுக்கினார் கலைஞர் என்பதைச் சொல்லும்போது அத்தனை மகிழ்ச்சி அவர் முகத்தில்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான நடுவர் பொறுப்பில் பணியாற்றியபோது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் இவரை அறிமுகப்படுத்தினார் இதழாளர் பெரியார் சாக்ரடீசு. அன்று முதல் பிரதிபாவிடம் மிகுந்த மகிழ்வோடு பாசம் காட்டுவார் ஆசிரியர் கி.வீரமணி.

கலைஞர், ஆசிரியர் இருவரிடமும் மாறாத பற்றும், சமூகநீதி, திராவிட இயக்க உணர்வும் கொண்டவர் பிரதிபா.

நாள்தோறும் பிரச்சினைகளையும், அடக்குமுறைகளையும் சுற்றியே வாழ்ந்து கொண்டிருக்கும் நக்கீரன் கோபால் தலைமையிலான பாசக்கார நக்கீரன் குடும்பத்தில் ஒரு கலகலப்பு நாயகி பிரதிபா லெனின்.

சமூக, அரசியல் நிகழ்வுகள், கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுப்பதோடு, அது குறித்து எதையும் துணிவோடு விவாதிக்கக் கூடியவர். இணையதள அவதூறு அரசியலுக்கு முன் எதிர்நின்று எள்ளலும், பண்பும் நிறைந்த பதில்களால் மோதக் கூடியவர்.

சற்று தேறிவந்த நிலையில் ஓய்வில் இருக்க விரும்பாமல், புத்தகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பியிருந்தார்.

மனமாறுதலும், ஊக்கமும் தான் அவருக்கு கூடுதல் தெம்பு என்ற மருத்துவர்களின் கருத்துக்கேற்ப ராஜபாளையத்தில் நடைபெறவிருந்த திமுக தோழர் ஒருவரின் திருமணத்திற்காக தன் வாழ்விணையர் கோவி.லெனினுடன் சென்றிருந்தார். நேற்று இரவு வரை உற்சாகமாகவே இருந்தவர், இரவு உணவுக்குப் பின் ஓய்வெடுத்தார். நிரந்தர ஓய்வு கொண்டுவிட்டார். காலையில் விழிக்கவில்லை. எழுப்பினார் லெனின். எத்தனையோ முறை நோயிலிருந்து மீண்டு எழுந்தவர் இம்முறை எழவில்லை. உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.

சிரித்த முகம், தோழமையாய்க் குடும்பத்தை நடத்திய பாங்கு, பழகுவோரிடம் காட்டும் உண்மையான பாசம், மகளைத் தோழியாக நின்று வளர்த்த தாய்மை, இணையரிடம் குழந்தையாகவும், இணையரைக் குழந்தையாகவும் இரு நிலைகளிலும் பழகிய காதல், தான் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக வைத்திருக்கும் பண்பு என பிரதிபா லெனினை நினைத்தால் மகிழ்வான தருணங்களே மனதில் தங்கும்.

வலியால் கடும் அவதியுற்ற பிரதிபா, அந்த வலி அதிகம் தெரியாமலேயே உறக்கத்திலேயே நம்மைப் பிரிந்துவிட்டார்.

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் அவர்களின் துணைவியார் பிரதிபா காலமானார். இன்று மாலை 3 மணியில் இருந்து சென்னை ராயப்பேட்டை, ஜானி ஜான்கான் சாலையில் உள்ள நக்கீரனின் அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இறுதி ஊர்வலம் 24.11.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

சகோதரி பிரதீபா லெனின் அவர்களது பிரிவு நக்கீரன் குடும்பத்திற்கு பேரதிர்ச்சி, பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கிவிட்டிருக்கிறது.

தொடர்புக்கு: 044 - 4399 3000

0 comments :

Post a Comment

 
Toggle Footer