Thursday, November 2, 2017

1961 ஜனவரி 21, 22 தேதிகளில் வேலூரில் திமுகவின் பொதுக்குழுவும் செயற்குழுவும் தொடங்கியது. முதல்நாள் செயற்குழு கூடியது. கூட்டத்திற்கு சம்பத் தலைமை வகித்தார்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கு சரியான உதாரணமாக சம்பத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. செயற்குழுவில் பேச எழுந்த மதுரை முத்து, கட்சியின் சட்டதிட்டங்களில் திருத்தம் கொண்டுவர தீர்மானங்கள் கொண்டுவந்தவர்களைப் பற்றி பேசினார். உடனே, “சபையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக்கூடாது” என்று சம்பத் கூறினார்.
இதற்கு பதிலளித்த பேராசிரியர் அன்பழகன், “இது சட்டமன்றமோ நாடாளுமன்றமோ இல்லை. இங்கு பேசலாம்” என்று கூறினார். அதையும் ஏற்காமல் “சபையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக்கூடாது” என்று திட்டவட்டமாக கூறினார். உடனே, மற்றவர்கள் எழுந்து “பேசுவோம், பேசுவதில் தவறில்லை” என்று கூறினார்கள்.
சம்பத்துக்கு கோபம் தலைக்கேறியது. “அப்படியானால் பொதுக்குழுவுக்கு போகலாம் வாருங்கள்” என்று, கையில் வைத்திருந்த பேனாவை தூக்கி வீசிவிட்டு, கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தார். உடனே, “வா போகலாம்” என்று மற்றவர்களும் வேகமாக எழுந்தனர். ஆத்திரத்தோடு உணர்ச்சிவயப்பட்டு எழுந்து நின்ற சம்பத், இதைக்கண்டதும் ஐந்து நிமிடம் அப்படியே நின்றுவிட்டார். அவர் எதிரே அண்ணாவும் மதியழகனும் நின்றுகொண்டிருந்தனர்.
செயற்குழுவில் எழுந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்த நடிகர்கள் எம்ஜியாரும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் மற்ற சிலரும் எழுந்து வேகமாக செயற்குழு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சற்றுநேரம் கழித்து, “அண்ணாவுக்கு இப்படி தொல்லைகள் கொடுப்பது நியாயமா?” என்று தில்லை வில்லாளன் கேட்டார். அவர் நா தழுதழுக்க சம்பத்திடம் இப்படிக் கேட்டதும்தான் அனைவரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.
பிறகு பேசிய அண்ணா, அனைவரும் பதற்றத்தைத் தணித்துக் கொள்ளும்படியும், பிரச்சனைகளை பேசித் தீர்க்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து செயற்குழு நடவடிக்கை தொடர்ந்தது.
கூட்டத்தில் அண்ணா எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ கட்டுரையைப் பற்றியும், அதற்கு பதில் அளித்து சம்பத் எழுதிய ‘அண்ணாவின் மன்னன்’ என்ற கட்டுரையைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
சம்பத் எழுதிய கட்டுரை தவறு என்று ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் கூறினார்கள். இதுகுறித்து பேசிய சம்பத், “எனக்கு சரியென்றும், கட்சிக்கு மிக மிகத் தேவையென்றும் எனக்குப்படுகிற கருத்துக்களை நான் தொடர்ந்து கூறிவருவது உண்மை. ஆனால், அவற்றை ஏற்றுக்கொள்ளாததுடன், எனது செயற்குழு நண்பர்களுக்கு மன வேதனையை தருவதை அறிகிறேன். நான் கொண்டுள்ள கருத்துக்கள் சிறுபான்மையினரின் ஆதரவையே பெற்றுள்ள நிலையில் பொறுப்பான அவைத்தலைவர் பதவியில் இருந்துகொண்டு எனது கருத்தை புகுத்த நினைப்பது தவறு. அது ஜனநாயகமும் ஆகாது. எனவே எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண உறுப்பினராகவே செயல்பட விரும்புகிறேன். எனது பதவி விலகலை செயற்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார்.
அண்ணா, “அப்படியெல்லாம் விலகத் தேவையில்லை சம்பத். யாருமே விலகத் தேவையில்லை” என்று வாதாடினார். செயற்குழுவில் இரவு 8 மணிவரை சம்பத்தை சமாதானப்படுத்த அண்ணாவும் மதியழகனும் முயன்றனர்.
சம்பத்தை அழைத்துக்கொண்டு மதியழகனுடன் வெளியே சென்று காரில் அமர்ந்தபடியே நீண்டநேரம் பேசினார். அப்போதும் சம்பத் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். மறுநாள் அண்ணாவைச் சந்தித்த சம்பத் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். அண்ணா கண்கலங்கினார். மாலை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக கூறிய சம்பத் சென்றுவிட்டார்.
அதன்பிறகு ஏ.கோவிந்தசாமி தலைமையில் செயற்குழு நடைபெற்றது. சம்பத்தின் பதவி விலகல் கடிதத்தை அண்ணா படித்தார். கடிதத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. பின்னர் நடந்த பொதுக்குழுவிலும் சம்பத்தின் பதவி விலகல் கடிதத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் பற்றியும், தமிழ்நாடு எனும் பெயர் பெற கிளர்ச்சி தொடங்க வேண்டும் என்ற தீர்மானமும் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முடிவாகப் பேசிய அண்ணா, கசப்புகளை நீக்கி கழகப்பணியாற்றும்படி கேட்டுக் கொண்டார்.
சில கசப்பான சம்பவங்களைத் தவிர்த்து, மற்றபடி செயற்குழுவும் பொதுக்குழுவும் அமைதியாக நடந்து முடிந்தாலும், திமுகவில் பிளவு என்றும், கடும் மோதல் என்றும், அடிதடியில் சட்டை கிழிந்தது என்றும், எம்ஜியாரும், எஸ்எஸ்ஆரும் சம்பத்தை அடிக்கப் பாய்ந்தார்கள் என்றும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.
அவற்றுக்கு அண்ணாவும் சம்பத்தும் உரிய விளக்கம் கொடுத்தாலும், பத்திரிகைகளின் போக்கு மாறவே இல்லை. இந்நிலையில்தான் திருச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் பேசும்போது அவர்மீது ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் நடைபெற்றது.
உடனடியாக அண்ணா இதைக் கண்டித்தார். நீண்ட அறிக்கை விடுத்தார். ஆனாலும், இந்தச் சம்பவத்தை காரணமாகக் கொண்டு சம்பத் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதை முடிவுக்குக் கொண்டுவர அண்ணாவும் மதியழகன் உள்ளிட்ட தலைவர்களும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.
சம்பத்தின் முக்கிய நோக்கமே கலைஞர் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், மதுரை முத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அவருடைய போக்கு கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அண்ணா அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், மதுரை முத்து ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அண்ணாவிடம் கொடுத்தனர். இதுதொடர்பான செய்தியும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டது. நிலைமை மிகவும் மோசமாகியது.
சம்பத்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. அண்ணா ஓடிவந்தார். கண்ணீர்விட்டு அழுதார். “உன் இஷ்டப்படியே நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவெடுப்போம். உடனே உண்ணாவிரதத்தை கைவிடு” என்று கெஞ்சினார்.
அதைத்தொடர்ந்து சம்பத் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. அண்ணாவே பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். பின்னர் அண்ணாவின் வீட்டுக்கு சம்பத் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் சம்பத்தை வந்து பார்த்துச் சென்றனர்.
1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் திருவொற்றியூரில் கூடியது. அதில் நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தும் பேசப்பட்டன. ஏ.வி.பி.ஆசைத்தம்பியும், கண்ணதாசனும் தங்களுடைய செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். கலைஞர் கருணாநிதி, எஸ்எஸ்ஆர் உள்ளிட்டோர் தங்கள் பதவி விலகலை பத்திரிகைகளுக்கு அளித்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். தங்கள் விலகலை திரும்பப்பெற்றனர்.
மறுநாள் மயிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கலைஞர் “சிதறிக்கிடந்த முத்துக்கள் சிலம்புக்குள் சேர்ந்துவிட்டன. சிந்திய நெல்மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன. சிந்திக் கிடந்த மலர்கள் மாலையாகிவிட்டன’ என்றார்.
வேலூர் நிகழ்வுகளுக்குப் பிறகு கட்சி சீரமைக்கப்பட்டுவிட்டது. சம்பத் உடல்நிலை தேறியதும் அண்ணாவும் அவரும் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், டெல்லி சென்று திரும்பிய சம்பத் அண்ணாவுடன் ஒரு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். பின்னர் மறுபடியும் டெல்லி சென்றுவிட்டார். 1962 ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னையில் டி.எம்.பார்த்தசாரதி எழுதிய திமுக வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில் சம்பத்துடன் அண்ணா, கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில் அண்ணா கலைஞர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
திட்டமிட்டே அண்ணா தன்னை புறக்கணித்ததாக சம்பத் செய்தியை பரப்பினார். ஆனால், மறுநாளே அண்ணாவைச் சந்தித்த மதியழகன் உள்ளிட்டோர் சம்பத்தை மீண்டும் எப்படி அவைத்தலைவராக்குவது என்பதற்கான வழிமுறைகளை பேசி முடிவு செய்துவிட்டு வந்தனர்.
எனினும் அதற்கு அடுத்தநாள் ஏப்ரல் 9 ஆம் தேதி திமுகவிலிருந்து பிரிவது என்ற முடிவோடு தனது ஆதரவாளர்களை சென்னை வரவழைத்தார் சம்பத். திமுகவிலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்த சம்பத்தை அழைத்து வரும்படி அண்ணா, என்.வி.நடராசனை அனுப்பினார். அண்ணாவின் அழைப்பை சம்பத் ஏற்க மறுத்து, தான் தயாரித்து வைத்திருந்த விலகல் அறிக்கையில் ஆதரவாளர்களிடம் கையெழுத்துப் பெறுவதில் முனைப்பாக இருந்தார். அவருடைய இல்லத்தில் செய்தியாளர்கள் கூடியிருந்தனர்.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மாலை திமுகவிலிருந்து விலகுவதாக சம்பத் அறிவித்தார். திமுகவில் முதல் பிளவு ஏற்பட்டது. அண்ணா மிகவும் கவலையடைந்தார். அன்று மாலை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சம்பத் இல்லை. பேசிய அனைவரும் சம்பத்தை இழந்த கவலையோடே பேசினர்.
கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த அண்ணா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. அண்ணாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதாக கூறிய சம்பத் நிஜத்தில் நீண்ட காலமாகவே கட்சியிலிருந்து விலக திட்டமிட்டு நாடகம் நடத்தியதாக கட்சிக்குள் ஒரு பிரிவினர் கருதத் தொடங்கினர்.
திமுகவிலிருந்து விலகிய சம்பத், கண்ணதாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஆதரவாளர்களுடன் கூடி, தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். தனித் தமிழ்நாடு பெறுவதே கட்சியின் நோக்கமாக அறிவித்தனர்.
இந்நிலையில் விடுதலைக்கு பிறகான மூன்றாவது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட தமிழ்தேசிய கட்சி முடிவெடுத்தது. அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை தந்தை பெரியார் ஆதரித்தார். திமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அதன் வாக்கு வங்கியைச் சோதிக்கும் தேர்தலாக இது கருதப்பட்டது.
சீர்திருத்தக் காங்கிரஸ் என்று கடந்த தேர்தலில் போட்டியிட்ட ராஜாஜி தனது கட்சிக்கு சுதந்திரா கட்சி என்று பெயரிட்டு, இந்த மூன்றாவது தேர்தலை சந்தித்தார். இந்தக் கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசு கட்சி, பொதுவுடைமைக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆனால் எதிர்க் கட்சியான திமுகவும் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட அண்ணா முயன்றார். ஆனால், இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரியான சுதந்திராக் கட்சிக்கும் இடையே இருந்த கொள்கை ஒவ்வாமை அவரது முயற்சிக்கு தடையாக அமைந்தது.
இறுதியில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுக விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொகுதி உடன்பாடு இருந்தது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையாலும் பெரியாரின் ஆதரவாலும் காங்கிரஸ் கட்சி பலமாகவே தேர்தலை சந்தித்தது.
இந்தத் தேர்தலில் சினிமா துறையினரின் பங்கு பெரிதாக இருந்தது. திமுகவுக்கு எம்ஜியாரும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பிரச்சாரம் செய்தனர். தேனி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகவும் எஸ்எஸ்ஆர் நிறுத்தப்பட்டார்.
சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி முதன்முறையாக “வாக்குரிமை” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரித்து தமிழகமெங்கும் திரையிட்டது.
தேர்தலில் சம்பத்தின் தமிழ்தேசியக் கட்சி 9 இடங்களில் மட்டும் போட்டியிட்டு 44 ஆயிரத்து 35 வாக்குகளை பெற்றது. பதிவான வாக்குகளில் 0.35 சதவீதம் மட்டுமே அது பெற்றது.
திமுக 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களைக் கைப்பற்றியது. 34 லட்சத்து 35 ஆயிரத்து 633 வாக்குகளை பெற்றது. பதிவான வாக்குகளில் இது 27.10 சதவீதமாகும்.
காங்கிரஸ் கட்சி 206 இடங்களில் போட்டியிட்டு 139 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த தேர்தலைக் காட்டிலும் 12 இடங்கள் குறைவாகப் பெற்றது. ராஜாஜியின் சுதந்திராக் கட்சி 94 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. பதிவான வாக்குகளில் இது 7 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.
காமராஜர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரசுக்கு போட்டியாக திமுக வலுவான எதிர்க்கட்சியாக வளரத் தொடங்கியது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை திமுக பெற்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer