அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் பாதிக்கப்பட்டுள்ள உடல்நிலையை கவனத்தில் எடுத்து, வவுனியா அல்லது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு அவர்களை மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எமது நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் பாரிய பணியை ஏற்றுள்ளீர்கள். அதனால் தாங்கள் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளின் பரிதாபகரமான நிலையை விரைவில் கவனத்தில் கொள்வது பொருத்தமானது.
அரசாங்கம் இம் மூவரின் வழக்கை வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றியது வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்கல்ல என்பது போல் தெரிகிறது. சாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்றும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லையென்பதே உண்மையென அறிய வருகின்றது. சாட்சிகள் இருக்குமிடம் தெரிந்திருந்தால் கூட அரசு அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களைக் குற்றவாளிகளாகக் காண்பதே அரச தரப்பாரின் நோக்கமெனத் தெரிகின்றது. நான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் “நாகமணி” வழக்கில் கொடுத்த தீர்ப்பு எல்லோரும் அறிந்ததே. அதனை உதாரணமாக வைத்து பல நீதிமன்றங்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இன்னொரு அனுசரணைச் சாட்சியத்தை வலியுறுத்தியிருந்தார்கள்.
அந்த வழக்கில் குறிப்பிட்டதாவது தனியே ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேறு ஒரு அனுசரணைச் சாட்சியமின்றி ஒருவரைக் குற்றவாளியாகக் காண்பது சரியான தீர்ப்பாக இருக்க முடியாது.
மட்டக்களப்பில் ஒரு இராணுவமுகாமை தாக்கியழித்து விட்டதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. ஆனால் இராணுவம் அப்படியெதுவும் இடம்பெறவில்லை என சாட்சியம் அளித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பொய்யாக்கியது.
அநுராதபுரம், பொலன்நறுவை போன்ற சில நீதிமன்றங்கள் எனது தீர்ப்பிற்கான காரண முடிவை ஏற்கமறுத்துள்ளன. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல நீதிமன்றங்கள் ஒரு விதத்திலான சுதந்திரமான அனுசரணைச் சாட்சியங்கள் மூலம் நடைபெற்ற சம்பவங்களை உறுதிப்படுத்தக் கோரியுள்ளனர். அரசுக்கு இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரை அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளாகக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளது.
Home
»
Sri Lanka
»
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திரிக்காவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!
Wednesday, November 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment