Thursday, November 9, 2017

புதிய அரசியலை படைக்க ஒவ்வோர் இளைஞனும் எதிர்பார்க்கிறான். ஆனால் அதற்கான ஒருங்கிணைப்பு எங்கே இருக்கிறது என்கிற தேடலில் அவன் கனவு கலைக்கப்பட்டே வருகிறது. அந்த ஒருங்கிணைப்பிற்கான முயற்சியை ஓர் இளைஞர் கூட்டம் செய்யத் துணிந்தும் அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அவலம் இந்த ஜனநாயக நாட்டில்தான் நடந்திருக்கிறது.

வெற்றிக்கதைகள்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை... முயற்சிக்கதைகளும் சொல்லப்படலாம்’ என்று தொடங்குகிறது ‘இளைஞர்கள் எனும் நாம்’ என்ற அந்த ஆவணப்படம். 2000ஆம் ஆண்டு சென்னை - கோடம்பாக்கம் லயோலா பள்ளி மாணவர்கள் 8 பேர் இளைஞர் விழிப்புணர்வு நாடகத்தின் மூலமாக ஒன்று சேர்கிறார்கள். அந்த 8 பேர்களில் ஒருவர்தான் கபிலன் வைரமுத்து. அவருடன் பிரசாந்த், இம்தியாஸ், விஜய், நித்யா, ஜெகன், ராஜபாண்டியன் மற்றும் நவீன் என அந்த இளைஞர்கள் அனைவரும் ஒரு சமூக மாற்றத்தை நோக்கி தங்கள் பயணத்தை முன்னெடுக்கிறார்கள்.

அரும்பு மீசை எட்டிப்பார்க்கிற அந்த வயதில், அரசியல் வெறுப்பு இயல்பாகிவிட்ட யுகத்தில் அவர்களுக்கு அரசியல் சிந்தனையும் கூடவே முளைத்தது ஆச்சரியம்தான். பள்ளிப்படிப்பை முடித்த அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்தபின்னர், 2002ஆம் ஆண்டு 8 பேராய் இருந்தவர்கள் 500 பேராய் மாறுகிறார்கள். ‘சுய சமுதாயப் படை’ என்கிற அமைப்பை தொடங்குவதற்கான தன்னம்பிக்கை அவர்களுக்கு பிறக்கிறது.

போஸ்டர் ஒட்டும் நேரத்தில் ‘படை’ என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, ‘உங்கள் இயக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா?’ என்று ஒரு காவலதிகாரி கேள்வி கேட்க, கையில் பசையோடு இருந்த இளைஞர்களுக்கு அப்போதுதான் அப்படி ஒரு முறை இருப்பதே தெரிய வந்திருக்கிறது.  ‘படை’ என்கிற தமிழ்ச் சொல்லே அதிகாரிகளை நடுங்கவைக்கிறது என்பதால், ‘இளைஞர் சமுதாய முன்னேற்ற சங்கம்’ என்கிற பதிவு செய்யப்பட்ட பெயரில் செயல்படத் தொடங்குகிறது அந்த சிறிய கூட்டம். அரசாங்கத்தைப் போலவே துறைகளை அமைத்து மக்கள் பணிகளைத் தொடர்ந்து வந்தார்கள்.

கும்பகோணம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தையும், இராமேஸ்வரம் அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர் நிலையையும், அவர்கள் கடந்து வந்த அனுபவத்தையும் பகிரும்போது நமக்கும் அது உருக்கமாகவே இருக்கிறது.

புதிய அரசியலை எதிர்நோக்கும் இளைஞர்கள் முதலில் எதிர்ப்பைச் சம்பாதிப்பது குடும்பத்தில்தான். அந்த இளைஞர்களின் குடும்பங்கள் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியை சார்ந்து இருக்க, அதை சவாலோடு சமாளித்ததையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

தமிழகமெங்கும் இந்தச் சங்கம் வளர்ந்த நேரத்தில்தான் கல்லூரிப் படிப்பை முடித்து அனைவருமே ஐ.டி. துறையில் வாய்ப்புகள் கிடைத்து பணியாற்றுகிறார்கள். அவர்களது அரசியல் பணிகள் மேலும் தீவிரமடைகிறது. 1,000 பேர் என்கிற எண்ணிக்கை 10,000 பேர் என மாற்றமடைகிறது. 2007-ஆம் ஆண்டு தங்கள் துறைசார்ந்த பணிகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்கு அந்த இளைஞர்கள் பயணித்தார்கள். கடல் கடந்த அந்த அனுபவம் தங்கள் அரசியல் இயக்கத்தை வலிமைப்படுத்த அவர்களுக்கு உதவியாக, மக்கள் அணுக்கப் பேரவையாக அந்த சங்கம் மாறுகிறது.

அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்று முடிவெடுத்து.. அந்த அறிவிப்புத் தேதிக்கு தயாரான சூழலில்தான் அவர்களுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. கபிலன் வைரமுத்து ஒரு முக்கிய காவல் அதிகாரியால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதையும் அதேபோல மக்கள் அணுக்கப் பேரவையில் உள்ள அவரின் நண்பர்கள் மிரட்டப்பட்டதையும் கேட்கும்போது, அதிர்ச்சியாக இருக்கிறது. ‘யானைகள் வீழ்த்தப்படுவதைவிட, எறும்புகள் நசுக்கப்படுவதே இங்கு அதிகம்’ என்று சொல்லும் கபிலன் வைரமுத்துவின் வார்த்தைகள் வலிகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

நசுக்கப்பட்ட அந்த எறும்புகள் மீண்டெழுந்து அரசியல் பயிற்சிகளை இளைஞர்களுக்கு கொடுத்து, தங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றன. ஒரு பெரிய அரசியல் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 50 போலீஸ்காரர்களும், ஒரு சிறிய இயக்கம் நடத்தும் போராட்டத்திற்கு 500 போலீஸ்காரர்களும் குவிக்கப்படுவது இங்குதான். இளைஞர்கள் கையில் எடுக்கும் புதிய அரசியலைப் பார்த்தே அதிகார வர்க்கம் அஞ்சுகிறது.

போஸ்டர் ஒட்டுவதையும், தலைவர் படத்தை பாக்கெட்டில் தெரியும்படி வைத்துக் கொள்வதையுமே தகுதியாக நினைக்கும் அரசியல்வாதிகளே.. மக்களுக்கான அரசியலை எப்போது செய்யப்போகிறீர்கள்? நீங்கள் செய்யாமல் இருப்பதைவிட, மாற்று அரசியலை நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களை அதைச் செய்யவிடாமல் தடுப்பது அநாகரிகம் இல்லையா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer