Friday, November 10, 2017

கூட்டு அரசாங்கம் நொண்டிக் குதிரையில் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கூட்டு எதிரணி மேற்கொண்டவாறு விமர்சித்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் முன்வைத்த வரவு- செலவுத் திட்டத்தைப்போல, எந்தவொரு பொருளாதார முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்காத வகையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. நாணய நிதியத்திலிருந்து கடனைப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு வெளியே சென்று மங்கள சமரவீரவினால் வரவு- செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாது.” என்றுள்ளார்.

“மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்காது, கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது“ என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி, வாழ்க்கைச்செலவு, வேலைவாய்ப்பு நெருக்கடி என்பவற்றுக்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் எந்த யோசனைகளும் இல்லை. அது மாத்திரமன்றி தேசிய வியாபாரத்துறை சீர்குலைந்துள்ளது. வெற்றியளிக்காத பொருளாதார சிக்கலை அதிகரிக்கும் வரவு- செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer