Tuesday, November 21, 2017

தமிழ் மக்களின் அரசியலுரிமைகளுக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும், மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) ஆரம்பித்துள்ளது. தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனித்த பின்னர் மாவீரர் நினைவேந்தல் வாரத்தை வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூரமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும், 7 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் முதல் மாவீரர் நினைவேந்தல் வாரத்தை வடக்கு- கிழக்கில் தமிழர்கள் பகிரங்கமாக நினைவுகூர்ந்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கிலுள்ள 3 மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் வாரம் இம்முறையும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்படவுள்ளது.

இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத ஆரம்பத்திலிருந்து பொதுமக்களால் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு, கிழக்கின் பொதுவான இடங்களிலும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இன்று பகிரங்கமாக ஆரம்பமாகின்றன.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தால் 1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் பிரதான நிகழ்வுடன் முடிவடையும். 27ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் துயிலும் இல்லங்களில் பொதுச் சுடர் ஏற்றப்படும். அதேநேரத்தில் மாவீரர்களின் கல்லறைகளில் அவர்களது உறவுகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer