Friday, November 3, 2017

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையிலும் பார்க்க மிக பின்தங்கிய நிலையில் அன்று இருந்த சிங்கப்பூர் இன்று உலகில் பெரும் வளர்ச்சி கண்ட நாடாக மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டு தலைவர் லீ இக்குவான் யூ அன்று மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகளே.

சில கடும்போக்காளர்களுக்கு பயப்படாமல் நாட்டின் எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். நாட்டில் உயர்மட்டத்திலான அரசியல் நல்லிணக்கம் காணப்படுகின்றது. இருப்பினும் வங்குரோத்து அரசியல்வாதிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உண்மைக்கு புறம்பான விடயங்களை சமூகத்தில் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். கடும்போக்கு மற்றும் இனவாதம், மதவாதம் உள்ளிட்டவற்றை தோற்கடிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

1948ஆம் ஆண்டில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபொழுது நல்லிணக்கம் தொடர்பில் எந்தவித பிரச்சனைகளும் இருக்கவில்லை. அப்பொழுது தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பேகர் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட்டனர். நாட்டில் இனவாத மோதல் 1956இற்கு பின்ரே ஏற்பட்டது. இதுவரையில் நிர்வாகத்தில் இருந்த அரசாங்கங்கள் கடும்போக்காளர்களின் காரணமாக தேசிய பிரச்சனையில் தீர்வுகாண்பதில் பின்வாங்கினர்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer