Thursday, November 2, 2017

சுயசாதி பெருமைகளைப் பேசும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை நிகழ்த்தும் சமூகம் இது. இந்த ஏற்றத்தாழ்வுகளையும், அவற்றால் நிகழ்த்தப்படும் தீண்டாமைகளையும் ஒழிப்பதற்கு கல்வி, பொருளாதாரம் என பல காரணிகளை முன்னெடுத்தாலும், சாதிமறுப்பு திருமணங்களே சரியான தீர்வாக இருக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் இடையிலான காதலுக்கு, இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வேல்முருகன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, திருப்பூர் மாவட்டம் கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த குணா என்பவர் நிவேதாவின் அப்பா சேகருக்கு செல்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த ஆடியோவும் வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.

அதில், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் குணா, பாப்பா ஆசைப்பட்டிருச்சு, முடிச்சி விட்டுறலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம் என வெள்ளந்தியாக பேசும் நிவேதாவின் அப்பாவை மிரட்டுகிறார். அதெப்படி தலித் ஒருவனுக்கு நம்ம புள்ளைய கட்டிக் கொடுப்பீங்க? அவன் யார்.. என்ன ஆளுங்க என்ற மொத்த விவரமும் என்கிட்ட இருக்கு. இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க.. இல்லைன்னா அந்தப் பையனையும், பொண்ணையும் வெட்டிப் போட்டுருவோம். பத்திரிக்கையில் திருநிறைச்செல்வன் வேல்முருகன்னு போட்டுருக்கு, அவன் ஒரு தலித் தெரியுமில்ல உங்களுக்கு? உங்க பொண்ணைக் கூட்டிட்டு ஈரோடுல ஒரு இடம் இருக்கு, அங்க கூட்டி வந்தீங்கன்னா அவங்க பொண்ணு மனசை மாத்தி அனுப்புவாங்க எனச் சொல்ல, ஏதும் சொல்ல வழியில்லாமல் அழும் குரலோடு அழைப்பைத் துண்டிக்கிறார் சேகர்.

இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் நம்மிடம், ‘சாதிமறுப்புத் திருமணங்கள் நடந்துவிட்டால், நம் சாதி புனிதம் கெட்டுப்போகும் என நினைக்கும் சாதிவெறி அமைப்புகள், சம்மந்தப்பட்டவர்களை பகிரங்கமாக மிரட்டுவது புதிதொன்றும் இல்லை. இவர்களை அரசு வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையான விஷயம். மிரட்டல்களுக்கான வடிவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், மிரட்டல்கள் தொடரத்தான் செய்யும். இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்தாத அரசியல் இயலாமையும் இது தொடர ஒரு முக்கியக் காரணம். சாதிஒழிப்பிற்கு கல்வியும், பொருளாதாரமும் கருத்தியல் ரீதியிலான முழக்கங்களை எடுத்துச் சென்றாலும், உண்மையில் சமூகத்தில் நேரடியான சாதிஒழிப்பின் செயல்வடிவம் சாதிமறுப்புத் திருமணங்களிலேயே இருக்கிறது. இந்த விவகாரங்களில் சாதிவெறியர்களை விடவும் முக்கியக் குற்றவாளியாக இருப்பது அரசுதான். காதலித்தவர்களுக்கு நேற்று காவல்துறையினரின் பாதுகாப்புடன் இக்கட்டான சூழ்நிலையில், அந்த இளைஞரின் வீட்டில் வைத்தே திருமணம் நடந்திருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், இந்தத் திருமணத்திற்கு தடையாக சமூக வலைதளங்களிலும், செல்பேசி வழியாகவும் மிரட்டல் விடுத்தவர்களின் மீது வழக்குப் பதியவுள்ளோம். காவல்துறை வழக்கை ஏற்க மறுத்தால், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்கிறார் உறுதியாக.

‘சமத்துவம் ஒரு கற்பனைக் கருத்தாக இருக்கலாம். ஆனால், அது ஆளும் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும்’ என்றார் அம்பேத்கர். சாதிய அடக்குமுறைகளால் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி சமத்துவத்திலேயே இருக்கிறது. அந்த சமத்துவம் சாதிமறுப்புத் திருமணங்களாலும் முன்னெடுக்கப்படும் பொழுது அதை ஆதரிக்க வேண்டிய கடமை எல்லோரிடத்தும் இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer