Friday, November 10, 2017

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55 . ப்ரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். தன் மாமா கணேசனின் நண்பரும்,நடிகரும் தயாரிப்பாளரும் ஆன பாலாஜியின் அறிமுகம் மூலம் ஒளிப்பதிவாளர்,இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். மூன்றாம் பிறை, சாத்மா, யாத்ரா, ஓலங்கள் என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் மணிரத்னம் படமான நாயகன் படத்தில் பி.சி.ஸ்ரீராமிடமும் , ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனிடமும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் அகத்தியனின்’ தொட்டா சிணுங்கி ’படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, பின்பு இயக்குனர் சேரனின் ”பொற்காலம்,தேசிய கீதம்,வெற்றிக்கொடி கட்டு” போன்ற படங்களில் வரிசையாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். முன்னணி நடிகர்களான நடிகர் கமலுடன் தெனாலி, நடிகர் பிரஷாந்த்துடன் ஸ்டார், மஜ்னு, தமிழ். நடிகர் விஜய்யுடன் உதயா,வேலாயுதம்,ஜில்லா மற்றும் விக்ரம், சூர்யா, சிம்பு, விஷால், சரத்குமார் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவரே. வேங்கை படத்தைத் தவிர ஹரியின்  படங்களான தமிழ், சாமி, கோவில், அருள், ஐயா,ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், சிங்கம் 2, பூஜை, சிங்கம் 3 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'சாமி 2' படத்துக்கும் ப்ரியன்தான் ஒளிப்பதிவாளர்.இந்நிலையில் ப்ரியன் சென்னை கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரான விருதுநகரில் இன்று (நவ 10) இறுதி சடங்கு நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer