உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார். 17 ஆண்டுக்குப் பிறகு இப்பட்டம் வெல்லும் இந்திய அழகி என்ற இடத்தை அவர் பெற்றுள்ளார்.
சீனாவின் சான்யா நகரில் 67வது உலக அழகிப் போட்டி நேற்று சனிக்கிழமை கோலாகலமாக நடந்தது. இதில், 118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர். இந்தியாவின் சார்பில் ‘மிஸ் இந்தியா’வான அரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) பங்கேற்றார். பல்வேறு கட்ட போட்டிகளின் அடிப்படையில் முதல் 40 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி நாளான நேற்று 40 அழகிகள் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து முதல்-15, முதல்-10, முதல்-5 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிச் சுற்றுக்கு மனுஷி சில்லருடன், மெக்சிகோ, இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா அழகிகள் தேர்வாகினர். இவர்களிடம் அறிவுத்திறன் உள்ளிட்ட சில பிரிவில் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில், உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற பியர்டோரிகாவின் ஸ்டீபனி டெல் வாலே, கிரீடம் அணிவித்து கவுரவித்தார். மனுஷி சில்லர் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி கூறினார். 2வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டீபனி ஹில்லும், 3ம் இடத்தை மெக்சிகோவின் ஆன்ட்ரியா மெஸாவும் பெற்றனர்.
கடைசியாக, 2000ம் ஆண்டில் தற்போது பாலிவூட்டில் பிரபல நடிகையாக விளங்கும் பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுக்குப் பிறகு உலக அழகி பட்டத்தை வெல்லும் இந்திய அழகி என்ற சாதனையை மனுஷி சில்லர் படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் 6வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sunday, November 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment