Friday, November 10, 2017

செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயிலில், ஒவ்வொரு ஸ்டேஷனிலும், அடுத்தடுத்த பெட்டிக்கு மாறிக்கொண்டே இருந்தான் அந்த சிறுவன். அவன் வசம் கொத்துக்கொத்தாக கீ செயின்கள். விலை கூவி விற்றான். பயணிகளும் பேரம் பேசி தங்களுக்குப் பிடித்த கீ செயினை வாங்கினர். எல்லோரும் அவனை வியாபாரியாகவே பார்த்தனர். ’படிக்க வேண்டிய வயதில் வியாபாரி ஆகிவிட்டானே? இவன் குழந்தை அல்லவா?’ என்று சிந்திக்கும் மனநிலையில் பலரும் இல்லை.

அவனிடம் பேச்சு கொடுத்தோம். “என் பெயர் தேவேந்திரன்” என்றான். அவனுக்கு வயது 13 தான் ஆகிறது. கீ செயின் வியாபாரத்தில் ஒரு நாளைக்கு ரூ.300 வரை கிடைக்கும் என்றபடி விருதுநகரில் அடுத்த பெட்டிக்குத் தாவினான்.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டமெல்லாம் கடுமையாக இருக்கிறது. குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்துபவருக்கு   ரூ.20000 அபராதம் விதிக்க வேண்டும். அரசாங்கமும் தன் பங்களிப்பாக அந்தக் குழந்தைக்கு ரூ.5000 தர வேண்டும். மொத்த நிதி ரூ.25000-ஐயும் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சட்டரீதியான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. “இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்” என்றார் மகாத்மா காந்தி.  ஆனாலும், நம் கண் முன்னே நாளும் உலவுகிறார்கள் குழந்தைத் தொழிலாளர்கள். நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோம். 

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படு குற்றம் ஆகும். ஆனால், வீட்டு வேலை பார்ப்பவர்கள், ஷூ பாலீஷ் போடுபவர்கள், உணவு விடுதிகளில் இலை எடுப்பவர்கள், அலுவலகங்களில் எடுபிடி வேலை பார்ப்பவர்கள், பீடி சுற்றுபவர்கள், தெருக்களில் குப்பை பொறுக்குபவர்கள், குவாரிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பவர்கள் என தேசமெங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள்.  நிலக்கரி சுரங்கங்களில் -  விவசாய நிலங்களில் - செங்கல் சூளைகளில், டெக்ஸ்டைல் தொழிலில் - கட்டுமானப் பணிகளில் - தீப்பெட்டி தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  உலகத்திலேயே அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் நிறைந்த  நாடாக, முதலிடத்தில் இந்தியா இருக்கிறது.

குழந்தைகள் உழைப்பு பெருமளவில் சுரண்டப்படுகிறது. இதனால், குழந்தைகள் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், தொழிலாளர்களாகவும் உள்ளனர். படிக்க வைக்க வேண்டிய வயதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது பெற்றோருக்கு அவமானம்.  குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாக சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்படாமல் இருப்பது  நம் நாட்டுக்கே அவமானம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer