Friday, November 3, 2017

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையிலுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்தினால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பறிபோகும் என்று முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அதிகாரப்பகிர்வு யோசனையை கைவிட்டு 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் தேர்தல் முறைமை திருத்தம் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நான்காவது நாளாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளில் நாம் மிகவும் நேர்மையுடனேயே பங்கேற்றிருந்தோம். எமது ஆட்சியிலும் இவ்வாறான செயற்பாடொன்றை ஆரம்பிக்க முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு எப்போதுமே எதிர்ப்பை வெளியிடும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தும் பேச்சு நடத்தியிருந்தேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வடக்கு மக்களுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நாம் இந்த நாட்டில் நிறைவேற்றிய பெரும் கடமை யுத்தத்தை நிறைவு செய்ததாதேயாகும்.

யுத்தத்தை நிறைவு செய்து நாம் வடக்கில் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையில் அரசியல் தீர்வொன்று தேவையென்பதால் அதற்கான பேச்சுக்களை நடத்த தயாரானோம். எனினும், புலம்பெயர்ந்தோரின் அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது அரசியல் அழுத்தங்கள் காரணமாகவோ இவர்கள் அனைவரும் அதை எதிர்த்தனர்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எனினும், ஏனையவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை.

நாம் மிகவும் நேர்மையுடனேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஐக்கிய தேசியக் கட்சி சகல சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக நடந்துகொண்டிருக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலப்பகுதியில் தீர்வுப் பொதியொன்று கொண்டுவரப்பட்ட போது ஐ.தே.க.வினர் தான் அதற்கு தீவைத்து கொளுத்தினர். நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதில்லை. நாம் நேர்மையாகவே செயற்பட்டிருக்கிறோம்.

இந்த அரசியலமைப்பு சபை தொடர்பான நடவடிக்கைகளில் நாம் கலந்துகொண்டோம். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் எமது யோசனைகளையும் முன்வைத்தோம். எனினும், இந்த அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு சந்தேகம் இருந்தது. இது உண்மையாக நோக்கில் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இதை ஆரம்பிக்கும் போது எமக்கு இருந்தது. சந்தேகத்திற்கு மத்தியில் கூட நாம் இதில் கலந்துகொண்டோம்.

நல்லாட்சியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்தவர்களுக்கே விவாதத்தில் கூடுதல் நேரம் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சூழ்ச்சியில் இருப்பவர்கள். உண்மையான எதிர்க்கட்சியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு சொற்ப நேரமே ஒதுக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக நான் குறிப்பிட்டிருந்ததாக இந்த உத்தேச அரசியலமைப்பு யோசனைகளை நியாயப்படுத்துவதற்காக இவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை ஏற்கிறேன். ஆகையால் தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மிகத் தெளிவாக தனது யோசனைகளை முன்வைத்துள்ளது.

நாட்டில் இன மற்றும் மத குரோதங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இனங்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும் சூழல் தலைதூக்கியுள்ளது. இன்று மத ரீதியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முதலிடத்தை மாற்றுவது பற்றி பேசப்படுகிறது. இல்லாதவொரு மத சிக்கலொன்று ஏற்படுவதற்கான பின்னணியொன்று இந்த அரசியலமைப்பின் மூலம் உருவாகும்.

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த நாம் எதிர்ப்பார்க்கவில்லை. நாட்டையும் இனங்களையும் ஐக்கியப்படுத்தும் அரசியலமைப்பொன்றே எமக்குத் தேவை. மத ரீதியாக அனைவரும் பேதங்களின்றி வாழும் சூழலொன்றையே நாம் இதன்மூலம் எதிர்பார்க்கிறோம். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணையை கோரவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்வோம் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூறப்பட்டதே தவிர, அரசியலமைப்பை மாற்றுவதாக கூறப்பட்டிருக்கவில்லை.

ஆகவே, மக்கள் ஆணையில்லாமலேயே இந்த விடயத்தை செய்யப் போகின்றனர்.

மத்திய அரசாங்கத்திருக்கும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த பட்டியலை இரத்துசெய்ய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளப்பெற மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமல்லாது நிதி அதிகாரத்தையும் மாகாண அலகுகளுக்கு வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாகாண அலகுகளுக்கு அதிகாரங்களை வழங்கியதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலும் சர்வஜன வாக்கெடுப்பினாலும் கூட இந்த அதிகாரங்களை மீளப்பெற முடியாத வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை நிறைவேற்றப்பட்டால் இந்த சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அடுத்த முறை பாராளுமன்றத்துக்கு போட்டியிடமாட்டார்கள். சகல அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு இருப்பதால், பாராளுமன்றத்துக்கு வருவதை விடவும் மாகாண சபைக்கு செல்வதே பொறுத்தமானதாக இருக்கும்.

எமது நாட்டின் தேச எல்லையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை சர்வதேசத்துக்கு கையளிப்பதாக இந்த அறிக்கையின் 5 சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உகந்ததல்ல. எமது தேச எல்லை மற்றும் மாகாண எல்லைகள் என்பவற்றை நாமே நிர்ணயிக்க வேண்டும்.

அதிகாரப்பகிர்வு கோட்பாடு வடக்கு அரசியல்வாதிகளுக்கு தேவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் பயன் இருக்கிறது.

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று இடைக்கால அறிக்கைக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை முஸ்லிங்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்று தெரியாது. முஸ்லிம் மக்கள் இதனை முற்றாக எதிர்க்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதற்கு எதிராகத் தான் 1987ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாகியது. வடக்கில் தமிழ் இனவாதிகள் முழுமையான அதிகாரத்தை கொண்டிருந்த காலப்பகுதியொன்று இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் நடத்தப்பட்ட விதம் அவர்களுக்கு இன்னும் மறக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளை தவிர்த்து ஏனைய இன மற்றும் மத ரீதியான கட்சிகள் இதுவரையிலும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தையே நாடிச் சென்றுள்ளன. இடைக்கால அறிக்கையிலுள்ள யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசுக்கான சகல அதிகாரங்களும் இல்லாமல் போகும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer