Friday, November 10, 2017

நீல- பசுமையை அடிப்படையாகக் கொண்ட 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினூடாக தனிநபர் வருமானத்தை 5,000 டொலர்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 72வது வரவு- செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. அவர், 02 மணியத்தியாலங்கள் 35 நிமிடங்கள் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியிருந்தார். அதன்போதே, மேற்கண்ட விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர சமர்ப்பித்த முதலாவது வரவு- செலவுத்திட்டம் இதுவாகும். கடந்தகால வரலாறுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமைச்சர் சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார். அதேநேரம் தமது அரசாங்கம் கடந்தகாலத்தைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் கூறினார். கடந்தகால மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த தனது அறிமுக உரையை சுருக்கமாக முடித்துக் கொண்ட அமைச்சர் 3.25 மணிக்கு வரவு, செலவுத்திட்டத்தின் யோசனைகளை வாசிக்க ஆரம்பித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் கடன்சுமையைக் குறைப்பது தொடர்பில் வரவு, செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான வாகனப் பாவனைகள் குறைக்கப்படவிருப்பதுடன், 2040ஆம் ஆண்டாகும்போது இலங்கையிலுள்ள சகல வாகனங்களையும் 'ஹைபிரிட்' அல்லது இலத்திரனியல் வாகனங்களாக மாற்ற எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார். அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தற்பொழுதே சைக்கிள்களுக்கு மாறியிருப்பதாக அவர் கூறினார். எம்பிக்கள் பாராளுமன்றத்துக்குள் சைக்கிளில் வந்தாலும் செல்லும்போது அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரிகளே அவற்றை செலுத்திச் சென்றதாகவும், எம்பிக்கள் திரும்பிச் செல்ல அவர்களின் சொகுசு வாகனங்கள் தற்பொழுது வந்திருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்தும் வரவு, செலவுத்திட்ட யோசனைகளை அமைச்சர் வாசிக்கும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது மேசைகளில் தட்டி வரவேற்புத் தெரிவித்திருந்தனர். வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனைகள் மற்றும் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மங்கள சமரவீர தனது உரையில் குறிப்பிட்டார்.

மாலை 5.45 மணிக்கு அமைச்சர் வரவு, செலவுத்திட்ட உரையை முடித்தார். சுமார் 2 மணித்தியாலங்களும் 35 நிமிடங்களிலும் அவர் வரவு, செலவுத்திட்ட உரையை நிறைவுசெய்தார். சபாநாயகர் கலரி பகுதியில் மாகாணசபையின் முதலமைச்சர்கள் சிலரும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அமர்ந்திருந்தனர். அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலரி பகுதியில் அமர்ந்திருந்து வரவு, செலவுத்திட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

வரவு, செலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதை முன்னிட்டு நேற்று பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நிதி அமைச்சின் அதிகாரிகள் வாகனத் தொடரணியில் பொலிஸ் பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.

வரவு, செலவுத்திட்ட உரையைத் தொடர்ந்து பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சம்பிரதாய பூர்வமான தேனீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், அமைச்சின் செயலாளர்கள், இராஜதந்திரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வரவு, செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக வரவு, செலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று முதல் வரவு, செலவுத்திட்டத்தின் விவாதம் ஆரம்பமாகும். இது எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரவிருப்பதுடன், 16ஆம் திகதி மாலை இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 9ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று 9ஆம் திகதி மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer