Sunday, November 19, 2017

எற்கனவே இவ்வருடம் செப்டம்பர் 23 ஆம் திகதி நிபுரு அல்லது Planet x என்ற விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு கோள் பூமியுடன் மோதி பெரும் அழிவு ஏற்படும் என மும்மொழியப் பட்டிருந்தது. இது அதிக ஊடகக் கவனம் பெற்றிருந்த போதும் இந்த நிபுரு கோள் உள்ளது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை என நாசா தெரிவித்து பொது மக்கள் மத்தியில் வதந்தியும் அச்சமும் பரவாது இருப்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் நவம்பர் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த நிபுரு கோள் பூமியில் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் என்று சர்ச்சைக்குரிய முறையான விளக்கம் அற்ற சில கொள்கையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதாவது இக்கோள் பூமியுடன் மோதும் என உறுதிபடத் தெரிவிக்காத இக்கொள்கையாளர்கள் பதிலாக இந்த நிபுரு கோள் மிக மோசமான உயிரிழப்பை விளைவிக்கும் பூகம்பங்களை பூமியில் ஏற்படுத்தும் என்றுள்ளனர். ஆனால் இக்கொள்கைகளை முற்றாக மறுத்துள்ள நாசாவின் மூத்த விஞ்ஞானி ஒருவர் நிபுரு என்ற கோள் எமது சூரிய மண்டலத்தில் அதுவும் பூமிக்கு அருகில் நிலைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிபுரு கோள் உண்மையில் இருக்கின்றது எனின் அதன் ஈர்ப்பலைகள் ஏன் இதுவரை காலம் நமது பூமியின் நிலவை தாக்கவில்லை என்றும் அந்த விஞ்ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக செப்டம்பர் 23 ஆம் திகதி நிபுரு பூமியுடன் மோதும் என ஒரு கிறித்தவ எண்கணிதவியலாளர் (Numerologist) தான் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மும்மொழிவு நிறைவேறாத பட்சத்தில் தற்போது வேறு சில கொள்கையாளர்கள் நவம்பர் 19 ஆம் திகதி குறித்த நிபுரு கோளின் தாக்கத்தால் பூமியில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றுள்ளனர்.

இந்த நிபுரு கோள் எமது சூரிய மண்டலத்தில் இருப்பது நிஜமானால் அது பூமிக்கு அருகில் வர பல வருடங்களுக்கு முன்பே ஏனைய கோள்களின் சுற்றுவட்ட பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் இந்த நிபுரு ஒவ்வொரு 3600 வருடங்களுக்கும் ஒருமுறை சூரியனை சுற்றி வருகின்றது என்பதை ஏற்க முடியாது எனவும் அவர்கள் விளக்கம் தருகின்றனர். இதனால் நிபுரு உட்பட ஏனைய ஆதாரம் இல்லாத சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய அனைத்துச் செய்திகளும் இணையத்தில் பரவி வரும் வெறும் வதந்தி என்கின்றது நாசா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer