Thursday, November 9, 2017

வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 160 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, பெங்களூரு, கொடநாடு கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று நிலையில் தற்போது தஞ்சாவூரிலும், சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு, மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் திவாகரன் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் டி.டி.வி தினகரன் அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன், திவாகரன் ஆதரவாளர் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மன்னார்குடியில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடலூரில் உள்ள சசிகலா ஆதரவாளர் சஜீவன் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான மர மில்களிலும் வருவமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஜெயலலிதா பழைய அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் புதுச்சேரி ஆரோவில் அருகே பொம்மேரிபாளையத்தில் உள்ள டி.டி.வி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தினகரன் இல்லதிற்கு வெளியே அவரது ஆதராவார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தினகரன் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வீடு, திருச்சி கே.கே.நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள கர்சன் எஸ்டேட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer