Thursday, October 5, 2017

“வடக்கு மாகாணத்துடன், கிழக்கு மாகாணத்தை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்பு விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போன்று காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவாக குற்றஞ்சாட்டிய அவர், வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தின் போது முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கு தமது தரப்பு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் கருத்தை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத விபரீதம் ஏற்படுத்த ஜே.ஆர். அரசு முயன்றது.

வடக்கு- கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புகள் மற்றும் விட்டுக் கொடுப்புகள் இடம் பெற வேண்டும். வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இது மேலும் தூபமிடுவதாகவே அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக்கூடாது என்ற போக்கையே இத்தகையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும்.

வடக்கு- கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும், அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமே. நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப்போன்று பேசுகின்றனர்.

முஸ்லிம்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தன் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்வுக்கு வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்து இதனை பற்றி ஆராயலாம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer