மாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத பயங்கரச் செயற்பாடு என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“வடக்கு- கிழக்கை இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோருகிறார்கள். அவ்வாறு இணைத்தால் என்னாவது? அவர்களுக்குத் தனியான அதிகாரத்தை வழங்குவதற்கு வழிசமைக்கப்படுகிறதா? வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் சமாதானமாக வாழவில்லையா? அவர்கள் சுதந்திரமாக தொழில்புரியவில்லையா?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இடைக்கால அறிக்கையை, நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை நாம் முற்றாக எதிர்க்கிறோம். இது, ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தன்னிச்சையாகத் தயாரித்த அறிக்கையாகும்.
புதிய அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறான இடம் வழங்கப்படவில்லை. அத்துடன் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் இந்நேரத்தில், புதிய அரசமைப்பு தேவையா?
கூட்டு எதிரணியினர் என்ற வகையில் நாம் முன்வைத்த யோசனைகள் இந்த அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை. எமது யோசனைகள் உள்வாங்கப்படாவிட்டால், அரசியலமைப்புக்குழுவில் இருந்து நாங்கள், விலகுவதாக ஏற்கெனவே பிரதமரிடம் தெரிவித்திருந்தோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாகாணங்களை இணைக்கக் கோருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அரசியலமைப்பு விவகாரத்தில் பிரதமரே, குழுவின் தலைவராக இருந்து தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதுடன், அவரின் தேவைக்கு ஏற்றவாறு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் எழுந்தமானமாக, தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியனவற்றின் யோசனைகள் ஒன்றாக இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மாத்திரமே இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறனர்.” என்றுள்ளார்.
Tuesday, October 31, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment